ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்களின் சமூக ஊடக கணக்குகள் மூலமாக விளம்பரம் செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமூக ஊடக தளங்களான இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் வெளியிடப்படும் விளம்பரங்களை ஒழுங்குபடுத்துவதற்காக ‘Advertiser Permit’ என்ற புதிய அனுமதியை அறிமுகப்படுத்தப்படுவதாக அமீரக மீடியா கவுன்சில் அறிவித்துள்ளது.
ஜூலை 30 அன்று அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, நாட்டின் வளர்ந்து வரும் டிஜிட்டல் விளம்பர இடத்தில் வெளிப்படைத்தன்மை, தொழில்முறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேகமாக மாறிவரும் ஊடக பயன்பாட்டிற்கு ஏற்ப நெகிழ்வான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த அனுமதி உள்ளது. மூன்று மாதங்களில் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த புதிய முறை, முதல் மூன்று ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும், டிஜிட்டல் விளம்பரத் துறையில் பணிபுரியும் அனைத்து தனிநபர்களுக்கும் இந்த அனுமதி கட்டாயமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பல சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் டிஜிட்டல் படைப்பாளர்களால் வரவேற்றாலும், புதிய விதியின் நடைமுறைகள் குறித்தும் இது கேள்விகளை எழுப்பியது. இந்தக் கவலைகளைத் தீர்க்க, UAE மீடியா கவுன்சில் விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
விளம்பரதாரர் அனுமதி குறித்த முக்கிய விளக்கங்கள்:
- யாருக்கு அனுமதி தேவை?
புதிய விதிமுறைகளின் கீழ், சமூக ஊடங்கங்களில் விளம்பர உள்ளடக்கத்தை பதிவிடும் எவரும் பணம் செலுத்தப்பட்டாலும் அல்லது செலுத்தப்படாவிட்டாலும் இந்த அனுமதியைப் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. - செல்லுபடியாகும் காலம்:
இந்த அனுமதி ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் மற்றும் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படலாம். காலாவதியான 30 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படாவிட்டால், அது ரத்து செய்யப்படும். - யாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது? தங்கள் சொந்த தயாரிப்புகள் அல்லது சேவைகளை விளம்பரப்படுத்தும் வணிக உரிமையாளர்களுக்கு அனுமதி தேவையில்லை. இருப்பினும், அவர்கள் தங்கள் பிராண்டை விளம்பரப்படுத்த வேறொருவரை பணியமர்த்தினால், அந்த நபர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதித் தேவைகள்:
விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே டிஜிட்டல் மீடியா அல்லது சமூக ஊடக சந்தைப்படுத்தல் செயல்பாட்டை அனுமதிக்கும் வணிக உரிமத்தை வைத்திருக்க வேண்டும். இந்த முயற்சி நுகர்வோர் மற்றும் படைப்பாளர்கள் இருவரின் உரிமைகளையும் ஆதரிக்கும் அதே வேளையில் ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் நம்பகமான டிஜிட்டல் மீடியா சூழலை உருவாக்குவதற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel