ADVERTISEMENT

ஊழியரை ஏமாற்றிய நிறுவனம்.. 4.3 லட்சம் திர்ஹம் வழங்க உத்தரவிட்ட அபுதாபி நீதிமன்றம்..!! !

Published: 31 Aug 2025, 1:30 PM |
Updated: 31 Aug 2025, 1:30 PM |
Posted By: Menaka

அபுதாபியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒரு முன்னாள் ஊழியர் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ஆதரவாக அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பில், ஊழியரின் நிலுவைத் தொகையான 434,884 திர்ஹம்ஸை அந்த திறுவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் தொழிலாளர்கள் தங்கள் முழு சேவை காலத்திற்கும் முழு விடுமுறை ஊதியத்திற்கு (vacation pay) உரிமையுடையவர்கள் என்பதையும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்த வழக்கு பதிவுகளின் படி, அந்த ஊழியர் ஜனவரி 2018 முதல் ஜூன் 2024 வரை அந்நிறுவனத்தில் பணிபுரிந்தார், அடிப்படை சம்பளம் 36,000 திர்ஹம் மற்றும் இலாபப் பகிர்வு உட்பட மொத்தம் 60,000 திர்ஹம் ஊதியத் தொகுப்பைப் பெற்றுள்ளார். அவரது சேவை முடிந்ததும், நிலுவையில் உள்ள ஊதியம், விடுமுறை ஊதியம், பணிநீக்க கிராஜுவிட்டி, அறிவிப்பு ஊதியம், கமிஷன்கள் மற்றும் தாமதமாக செலுத்தும் வட்டி ஆகியவற்றைக் கோரி முதலாளிக்கு எதிராக நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்ததாகக் கூறப்படுகின்றது.

ஆரம்பத்தில், இந்த வழக்கை விசாரித்த முதல் நிகழ்வு நீதிமன்றம் (Abu Dhabi Court of First Instance) அவருக்கு 323,400 திர்ஹம்ஸ் ரொக்கத்தை வழங்குமாறு முதலாளிக்கு உத்தரவிட்டது. இந்தத் தொகை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் செலுத்தப்படாத ஊதியம், கிராஜுவிட்டி மற்றும் விடுமுறை ஊதியத்தை உள்ளடக்கியது. எனவே, தீர்ப்பில் திருப்தி அடையாத ஊழியர் வழக்கை மேல்முறையீடு செய்திருக்கிறார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்ய அபுதாபி நீதிமன்றத்தால் ஒரு நிபுணர் நியமிக்கப்பட்டார். நிபுணரின் அறிக்கையைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு நீதிமன்றம் ஊழியருக்கு வழங்க வேண்டிய தொகையை 379,400 திர்ஹம்ஸ் ஆக உயர்த்தியது.

பின்னர் அவர் தனது வழக்கை கேசேஷன் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று, கடந்த இரண்டு ஆண்டுகளை மட்டுமே இந்த தீர்ப்பு உள்ளடக்கியதாகவும், அதே நேரத்தில் தனது 6 ஆண்டுகள், 5 மாதங்கள் மற்றும் 26 நாட்கள் சேவைக்கு விடுமுறை ஊதியத்திற்கு உரிமை உள்ளதாகவும் வாதிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அமீ்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எவ்வளவு காலம் பணியாற்றினாலும், வேலையை விட்டு வெளியேறியவுடன் பயன்படுத்தப்படாத அனைத்து விடுமுறை நாட்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று UAE தொழிலாளர் சட்டம் எண். 33/2021 கூறுகிறது. எனவே இதனை மேற்கோள் காட்டி அவர் வாதிட்ட நிலையில், அவரது வாதத்தை உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது,

இறுதியாக முழு விடுமுறை ஊதியத்திற்கும், பிற நிலுவைத் தொகைகளுக்கும் அவரது உரிமையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது, இதன் மூலம் மொத்த ஊதியம் 434,884 திர்ஹம்ஸை ஊழியருக்கு வழங்குமாறு தீர்ப்பளித்தது. மேலும், வழக்கறிஞருக்கான சட்டக் கட்டணங்கள் 1,000 திர்ஹம்ஸ் உட்பட நீதிமன்ற கட்டணங்களை முதலாளி செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பு ஐக்கிய அரபு அமீரக ஊழியர்கள் விடுமுறை ஊதியத்தை இழக்க முடியாது என்பதையும், சேவை முடிவு சலுகைகளைத் தீர்க்கும்போது பயன்படுத்தப்படாத அனைத்து விடுமுறைகளுக்கும் நிறுவனங்கள் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel