நேற்று (செப்டம்பர் 9, செவ்வாய்க்கிழமை) கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஒரு மூத்த ஹமாஸ் பேச்சுவார்த்தையாளரின் மகன் உட்பட குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலர் காயமடைந்ததாகக் கூறப்படுகின்றது. இருப்பினும், ஹமாஸ் தனது உயர்மட்டத் தலைவர்கள் தாக்குதலில் இருந்து தப்பியதை உறுதிப்படுத்தியது. மூத்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கட்டாரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளால் அங்கு வசிப்பவர்கள் பீதியில் உள்ளனர்.
அக்டோபர் 7 படுகொலைக்கு காரணமான ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைத் தோற்கடிக்க இந்த நடவடிக்கை ஒருதலைப்பட்சமாகவும் சுதந்திரமாகவும் மேற்கொள்ளப்பட்டது என்பதை இஸ்ரேல் பகிரங்கமாக அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
கத்தார் இந்த தாக்குதலை அதன் இறையாண்மையை கோழைத்தனமாக மீறுவதாகக் கண்டித்தது, அதேநேரத்தில் ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த தாக்குதலை கத்தாரின் பிராந்திய ஒருமைப்பாட்டின் “அப்பட்டமான மீறல்” என்று கண்டித்து, அனைத்து தரப்பினரும் நீடித்த போர்நிறுத்தத்தை அடைவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் ஜோர்டான் போன்றவை கத்தாருக்கு முழு ஆதரவையும் உறுதியளித்து கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த நடவடிக்கைக்கு பச்சைக்கொடி காட்டியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் அதிகாரிகளை மேற்கோள் காட்டி கூறி வருகின்றன. இது குறித்து ஜனாதிபதி டிரம்ப் வருத்தம் தெரிவித்ததுடன் அத்தகைய தாக்குதல் தோஹாவில் மீண்டும் நிகழாது என்று அதன் தலைமைக்கு உறுதியளித்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.
மேலும், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த தாக்குதலைக் கண்டித்து, இது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அவசர போர்நிறுத்தம் மற்றும் காசாவிற்கு உதவி செய்வதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஐரோப்பியத் தலைவர்கள் (பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை) இதற்கு கடுமையான மறுப்பைத் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஆதரவுடன் கூடிய போர் நிறுத்தத் திட்டத்தை மதிப்பிடுவதற்காக ஹமாஸ் நடத்திய கூட்டத்தின் போது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நடவடிக்கையானது, கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா தலைமையிலான தொடர்ச்சியான மத்தியஸ்த முயற்சிகளை கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், இது சாத்தியமான முன்னேற்றத்தில் கடுமையான சந்தேகங்களை எழுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel