இன்று (செப்டம்பர் 10, புதன்கிழமை) காலை ஷேக் சையத் சாலையில் நின்று கொண்டிருந்த லாரியுடன் மோதி பைக் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்ததாக துபாய் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அபுதாபி நோக்கி செல்லும் அரேபியன் ராஞ்சஸ் பாலத்திற்கு சற்று முன்பு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு லாரி பாதுகாப்பற்ற முறையில் சாலையின் ஹார்ட் ஷோல்டரில் (hard shoulder) நிறுத்தப்பட்டதால் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பைக் ஓட்டுநர் சரியான நேரத்தில் செயல்பட முடியாமல், கட்டுப்பாட்டை இழந்து வாகனத்தின் மீது மோதிய நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொதுத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் ஜுமா பின் சுவைதான் அவர்கள் பேசுகையில், லாரியின் முறையற்ற நிறுத்தம் மற்றும் ஓட்டுநரின் கவனக்குறைவு ஆகிய இரண்டாலும் விபத்து ஏற்பட்டதாக விளக்கியுள்ளார்.
அமீரகத்தில் வாகனங்களின் திடீர் செயலிழப்புகள் அல்லது மருத்துவ சூழ்நிலைகள் போன்ற அவசரநிலைகளுக்கு மட்டுமே சாலையின் ஹார்ட் ஷோல்டர் பயன்படுத்தப்படுகிறது என்றும், தவறாகப் பயன்படுத்துவது பெரும்பாலும் கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும் பிரிகேடியர் பின் சுவைதான் நினைவூட்டலை வழங்கினார்.
மேலும், சாலைகளில் பாதுகாப்பற்ற நிறுத்தங்கள் துபாயில் கிட்டத்தட்ட தினசரி விபத்துக்களை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்ட அவர், தேவையில்லாமல் வாகனங்களை நிறுத்துவது கடுமையான அபராதங்கள், கருப்பு புள்ளிகள் மற்றும் வாகன பறிமுதல் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஓட்டுநர்களுக்கான பாதுகாப்பு நினைவூட்டல்கள்
- வாகனங்களை ஹார்ட் ஷோல்டரில் நிறுத்துவதற்குப் பதிலாக வலதுபுற பாதுகாப்பான பாதையில் நகர்த்தவும்.
- வாகனச் செயலிழப்புகளைத் தடுக்க பயணங்களுக்கு முன் வாகன சோதனைகளை மேற்கொள்ளுங்கள்.
- உண்மையான அவசரநிலைகளில் அபாய விளக்குகளைப் பயன்படுத்தவும்.
அதுமட்டுமின்றி, ஓட்டுநர்கள் வேக வரம்புகளைக் கடைப்பிடிக்கவும், மொபைல் போன்கள் போன்ற கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும் பிரிகேடியர் பின் சுவைதான் வலியுறுத்தியுள்ளார்.
கடுமையான அமலாக்கம்
மேலும், தொடர்ந்து பேசிய பிரிகேடியர் பின் சுவைதான், “போக்குவரத்துச் சட்டங்களுக்கு இணங்குவதே உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கான ஒரே வழி. துபாய் காவல்துறையானது விதிமீறுபவர்களுக்கு எதிராக, குறிப்பாக மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆபத்தான குற்றங்களைச் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகளை தொடர்ந்து அமல்படுத்தும்” என்று கூறி சாலைப் பாதுகாப்பிற்கான துபாய் காவல்துறையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேசமயம், அனைத்து சாலை பயனர்களும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதிலும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel