சவுதி அரேபியாவின் மத்திய வங்கி, கூகிள் பே விரைவில் நாடு முழுவதும் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்று அறிவித்துள்ளது, இது நாட்டின் பணமில்லா பொருளாதாரத்தை நோக்கிய முயற்சியில் மற்றொரு முக்கிய படியாகும். சமீபத்தில் சவுதி தலைநகர் ரியாத்தில் நடந்த ‘Money20/20 Middle East’ நிகழ்வின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அத்துடன் சவூதி மத்திய வங்கி (SAMA), 2026 ஆம் ஆண்டுக்குள் அலிபே+ (Alipay+) பேமண்ட்ஸை ஏற்றுக்கொள்ளும் வகையில் ‘Ant International’ உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இரு நிறுவனங்களும் நாட்டின் தேசிய கட்டண முறையான ‘mada’வைப் பயன்படுத்தும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றங்கள் சவுதியின் விஷன் 2030 இலக்குகளான டிஜிட்டல் பொருளாதாரத்தை விரிவுபடுத்துதல், நிதி சேர்க்கையை அதிகரித்தல் மற்றும் 2025 ஆம் ஆண்டுக்குள் கேஷ்லெஸ் பரிவர்த்தனைகளின் பங்கை 70 சதவீதமாக உயர்த்துதல் ஆகியவற்றுடன் ஒத்துப்போகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“கூகுள் பே ஒரு மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான கட்டண அனுபவத்தை வழங்குகிறது, இது பயனர்கள் கூகுள் வாலட் செயலி மூலம் தங்கள் மடா மற்றும் கிரெடிட் கார்டுகளை எளிதாகச் சேர்க்க மற்றும் நிர்வகிக்க அனுமதிக்கிறது” என்று SAMA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேபோல், அலிபே+ அறிமுகப்படுத்தப்படுவது சர்வதேச பார்வையாளர்களுக்கும் பயனளிக்கும், அவர்கள் சேவையை ஆதரிக்கும் சவுதி சில்லறை விற்பனையாளர்களிடம் சுமூகமான மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை செய்ய முடியும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக SAMA ஆளுநர் அய்மன் அல்-சயாரி அவர்கள் பேசிய போது, 2022 இல் 82 நிறுவனங்களிலிருந்து ஆகஸ்ட் 2025 இல் 281 நிறுவனங்களாக வளர்ந்த நாட்டின் ஃபின்டெக் துறையின் விரைவான விரிவாக்கத்தை எடுத்துரைத்துள்ளார். இந்தத் துறையில் முதலீடுகள் சராசரி 9 பில்லியன் சவுதி ரியால்களை ($2.39 பில்லியன்) எட்டியுள்ளன, இது பிராந்தியத்தின் மிகவும் கவர்ச்சிகரமான சந்தைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
‘payments ecosystem’ இந்த வளர்ச்சிக்கு வலுவான உந்துதலாக உள்ளது என்று குறிப்பிட்ட அல்-சயாரி, 2024 ஆம் ஆண்டு வாக்கில், அனைத்து சில்லறை பரிவர்த்தனைகளிலும் இ-பேமண்ட் 79 சதவீதமாக இருந்தன, அதே நேரத்தில் இ-பேமண்ட்ஸின் எண்ணிக்கை 12.6 பில்லியனாக உயர்ந்தது, இது 2023 இல் 10.8 பில்லியனாக இருந்தது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
செப்டம்பர் 15 முதல் 17 வரை நடைபெறும் Money20/20 மத்திய கிழக்கு மாநாடு, 451 பிராண்டுகள், 450 பேச்சாளர்கள், 1,051 முதலீட்டாளர்கள் மற்றும் 157 தொடக்க நிறுவனங்களை ஒன்று திரட்டியுள்ளது, இது இந்தப் பிராந்தியத்தில் பணம், நிதி மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கவனம் செலுத்துகிறது.
சவூதி அரேபியாவின் நிதி அமைச்சர் முகமது அல்-ஜாதான் இந்நிகழ்வில் உரையாற்றிய போது, நாட்டின் நிதிச் சந்தை இப்போது 2.4 டிரில்லியன் சவுதி ரியால்- ஐத் தாண்டியுள்ளது, இது உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நிதி சேவைகளில் ஒருங்கிணைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel