எமிரேட் முழுவதும் குடியிருப்பாளர்களை தொந்தரவு செய்யும் வகையிலும் மற்றும் சாலை பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும் வகையிலும் சட்டவிரோத மாற்றங்கள் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் 40 மோட்டார் சைக்கிள்களை ஷார்ஜா காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
ஷார்ஜா முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் மொபைல் ரோந்துகள் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அனுமதி இல்லாமல் மாற்றப்பட்ட வாகனங்களை, குறிப்பாக அதிக சத்தத்தை உருவாக்கும் வாகனங்களை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகைய மாற்றங்கள் ஓட்டுநர்கள் மற்றும் பிற சாலை பயனர்களை ஆபத்தில் ஆழ்த்துவது மட்டுமல்லாமல், பொது வசதியையும் சீர்குலைக்கும் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். அத்துடன், இந்த ஆய்வுப் பிரச்சாரம் விதியை மீறுபவர்களை தண்டிப்பது மட்டுமல்லாமல், விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் பொறுப்பான ஓட்டுநர் நடத்தையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் காவல்துறையினர் எடுத்துரைத்துள்ளனர்.
சத்தம் மற்றும் சட்டவிரோத மாற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள்
- ஹாரன்கள் அல்லது இசை அமைப்புகளால் மற்றவர்களை தொந்தரவு செய்தல்: 400 திர்ஹம் அபராதம் மற்றும் 4 கருப்பு புள்ளிகள் விதிக்கப்படும்.
- மாற்றியமைக்கப்பட்ட/சத்தமான வாகனங்களுடன் இரைச்சலை ஏற்படுத்துதல்: 2,000 திர்ஹம் அபராதம் மற்றும் 12 கருப்பு புள்ளிகள்.
- அனுமதியின்றி மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள்: வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்; 10,000 திர்ஹம்ஸ் வெளியீட்டு கட்டணம் செலுத்த வேண்டும். 3 மாதங்களுக்குப் பிறகு செலுத்தப்படாவிட்டால் ஏலம் விடப்படும்.
கடந்த ஆண்டு, உள்துறை அமைச்சகம் ஷார்ஜாவில் தொந்தரவு தரும் சத்தத்திற்காக 504 அபராதங்களை பதிவு செய்தது, இது அஜ்மானில் 117 மற்றும் புஜைராவில் 8 ஆக இருந்தது. இதற்கிடையில், இந்த ஆண்டு பிப்ரவரியில், அபுதாபி மற்றும் அல் அய்ன் அதிகாரிகள் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மற்றும் இரைச்சல் உண்டாக்கும் வாகனங்களை குறிவைத்து இதேபோன்ற நடவடிக்கையில் 106 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், ஷார்ஜா காவல்துறை அனைத்து ஓட்டுநர்களையும் போக்குவரத்துச் சட்டங்களுக்கு இணங்கவும், ஆரோக்கியமான சாலை நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பொதுப் பாதுகாப்பிற்கு பங்களிக்கவும் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel