துபாயில் உள்ள ஷேக் முகமது பின் சையத் சாலையில் கடந்த புதன்கிழமை காலை, பழுதடைந்து நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியதில் பைக் ஓட்டுநர் ஒருவர் பலத்த காயமடைந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின் படி, ஷார்ஜா நோக்கிச் செல்லும் ஹெஸ்ஸா பிரிட்ஜிற்கு பிறகு, லாரி ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக சாலையின் நடுவில் நின்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.
அந்த வழியாக சென்ற பைக் ஒன்று நின்று கொண்டிருந்த வாகனத்தின் பின்புறத்தில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் காயமடைந்த பைக் ஓட்டுநர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்வத்தைத் தொடர்ந்து, சாலையின் நடுவில் நிறுத்துவது மிகவும் ஆபத்தான போக்குவரத்து மீறல்களில் ஒன்றாகும், இது பெரும்பாலும் கடுமையான காயங்கள் மற்றும் இறப்புகளுக்கு வழிவகுக்கும் என்று துபாய் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 98 இன் கீழ், முறையான காரணமின்றி சாலையின் நடுவில் வாகனத்தை நிறுத்தும் வாகன ஓட்டிகளுக்கு 1,000 திர்ஹம் அபராதம், ஆறு பிளாக் பாயின்ட்ஸ் மற்றும் போக்குவரத்தைத் தடுத்ததற்காக கூடுதலாக 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து போக்குவரத்து பொதுத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் ஜுமா சலிம் பின் சுவைதான் அவர்கள் பேசுகையில், வாகனங்கள் புறப்படுவதற்கு முன் சாலைக்கு ஏற்றவாறு இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும், வாகனம் பழுதடைந்தால் அல்லது அவை இயங்காமல் இருந்தால் உடனடியாக காவல்துறையினரைத் தொடர்பு கொள்ளவும் ஓட்டுநர்களை வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற இக்கட்டான சூழலில் காவல்துறை ரோந்துப் பணியாளர்கள் வாகனத்தைப் பாதுகாப்பார்கள் மற்றும் சாலைப் பயனாளர்களைப் பாதுகாக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.
உங்கள் கார் பழுதடைந்தால் என்ன செய்ய வேண்டும்?
- உடனடியாக அபாய விளக்குகளை (hazard lights) இயக்கவும்.
- வாகனத்தின் பின்னால் பாதுகாப்பான தூரத்தில் ஒரு எச்சரிக்கை முக்கோணத்தை (warning triangle) வைக்கவும்.
- காரை சாலையிலிருந்து வெளியேற்றி பாதுகாப்பான பகுதிக்குச் செல்லவும்.
- உதவிக்கு காவல்துறையினரை அழைக்கவும், இதனால் ரோந்துப் பணியாளர்கள் வாகனத்தைப் பாதுகாக்க முடியும்.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புறக்கணிப்பது மேற்கண்ட விபத்து போன்ற கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel