ADVERTISEMENT

துபாய்: குடிபோதையில் வாகனம் ஓட்டிய பெண் ஏற்படுத்திய விபத்தால் பாதசாரி ஒருவர் பலி..!! நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு..!!

Published: 1 Oct 2025, 8:49 AM |
Updated: 1 Oct 2025, 8:49 AM |
Posted By: Menaka

துபாய் நீதிமன்றம் மது அருந்தி வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதற்காக ஒரு பெண் ஓட்டுநரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து, மேலும், அவர் செய்த விதிமீறலுக்காக 10,000 திர்ஹம் அபராதமும், குற்றத்திற்கு இறந்தவரின் குடும்பத்திற்கு 200,000 திர்ஹம் பணமும் (blood money) செலுத்த உத்தரவிட்டது என்று உள்ளூர் நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த துயர சம்பவம் இரவில் அல் குத்ரா பகுதியில் நடந்ததாகக் கூறப்படுகின்றது. அரபு நாட்டை சேர்ந்த அந்தப் பெண், மது அருந்தி விட்டு இரவு நேரத்தில் வாகனத்தை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக பதிவுகள் கூறுகின்றன. குடிபோதையில் வாகனம் ஓட்டிய அந்தப் பெண், திடீரென வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அவரது கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதியது, பின்னர் அது தெருவிளக்கு மற்றும் நிறுத்தப்பட்டிருந்த காரில் தள்ளப்பட்டு மூன்றாவது வாகனத்தில் மோதியது.

பின்னர் ஓட்டுநரின் கார் மூன்று பாதசாரிகள் மீது மோதியது, அவர்களில் ஒருவர் பலத்த காயங்களால் இறந்தார். மற்ற இருவரும் காயமடைந்தனர் என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

இதையடுத்து, நீதிமன்ற விசாரணைக்கு வந்த இந்த வழக்கு பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. விபத்து நடந்த நேரத்தில் அந்தப் பெண் குடிபோதையில் இருந்ததை மருத்துவப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தின, இதை அவர் போலீஸ் விசாரணைகளின் போது ஒப்புக்கொண்டார். சாலையின் நடுவில் பாதசாரிகள் நிற்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும் அவர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

போதை மற்றும் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட விபத்துக்கு அவர்தான் முழு பொறுப்பு என்று நீதிமன்றம் கூறியது. இருப்பினும், உயிர் பிழைத்த இரண்டு பாதசாரிகளும் நியமிக்கப்பட்ட கிராஸிங் பகுதிகளுக்கு வெளியே சாலையின் நடுவில் நின்றதால், அவர்களும் விபத்தில் பங்களித்தார்கள் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

ADVERTISEMENT

இறுதியாக, அபராதம் மற்றும் பணத்திற்கு கூடுதலாக, மோதலில் ஈடுபட்ட அனைத்து வாகனங்களுக்கும் ஏற்பட்ட சேதங்களுக்கான செலவையும் ஏற்க வேண்டும் என்று அந்தப் பெண்ணுக்கு உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு அமீரகத்தில் சாலை விதிகளைக் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel