அபுதாபியின் மணல் திட்டுகளிலிருந்து ஹஜர் மலைகளின் வியத்தகு சிகரங்கள் வரை என, எதிஹாட் ரயில் 2026 ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள அதன் முதல் பயணிகள் ரயில் சேவையின் மூலம் எமிரேட்ஸ் முழுவதும் பயணத்தை மாற்ற உள்ளதாக ஒரு அமீரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அபுதாபியில் நடைபெற்ற குளோபல் ரயில் மாநாட்டில் பேசிய எதிஹாட் ரயில் மொபிலிட்டியின் துணை தலைமை நிர்வாகி அஸ்ஸா அல் சுவைதி அவர்கள், எதிஹாட் ரயில் நெட்வொர்க்கில் தனது சமீபத்திய சோதனை பயணத்தை ஒரு பெருமையான தருணம் என்று விவரித்துள்ளார். மேலும், தொடர்ந்து பேசுகையில், “இந்த பயணத்தில் குன்றுகள் மற்றும் பாலைவனத்தின் அழகான காட்சிகள் நிறைய உள்ளன. நீங்கள் ஃபுஜைராவுக்குச் செல்லும்போது, ஹஜர் மலைகள் வழியாகச் செல்லும் ஒரு பாதை உள்ளது. இது மிகவும் அழகான அனுபவம்,” என்றும் தெரிவித்துள்ளார்.
சாலைப் பயணத்துடன் ஒப்பிடும்போது ரயில் பயணத்தின் மன அழுத்தமில்லாத தன்மையையும் அல் சுவைதி எடுத்துரைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: “நீங்கள் சாலையில் பயணிக்கும்போது, நெரிசலில் சிக்கிக் கொள்கிறீர்கள், அது மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ரயிலில், நீங்கள் அனுபவிக்கக்கூடிய ஒரு மென்மையான பயணம் இது. இது பயனர் நட்பு மற்றும் உங்கள் நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
900 கி.மீ. பரந்த தேசிய ரயில் நெட்வொர்க்
இந்த மாநாட்டின் போது விரிவாகக் காட்டப்பட்ட வரைபடத்தின் படி, 900 கி.மீ. நீளமுள்ள எதிஹாட் ரயில் நெட்வொர்க் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பயணிகள் நிலையங்கள், சரக்கு முனையங்கள் மற்றும் பராமரிப்பு டிப்போக்களை இணைக்கும் என்பது தெரிய வந்துள்ளது, இது பாலைவன நிலப்பரப்புகள் மற்றும் மலைத்தொடர்கள் வழியாக இயங்கும்.
இந்த வரைபடத்தின் படி, அபுதாபியின் சிலா, அல் தன்னா, மதீனத் சையத், மெஸ்ஸெரா மற்றும் அபுதாபி நகர நிலையங்கள்; துபாயின் ஜெபல் அலி மற்றும் அல் மக்தூம் விமான நிலையம்; ஷார்ஜாவின் அல் தைத்; மற்றும் புஜைரா ஆகியவை முக்கிய நிறுத்தங்களில் அடங்கும். இந்த ரயில் நெட்வொர்க் ஓமன் வரை நீட்டிக்கப்பட்டு, சோஹார் மற்றும் அல் புரைமி நிலையங்களுடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் சேவைகளுக்கான மூலோபாய கூட்டாண்மை
இந்த மாநாட்டில், பயணிகள் சேவைகளை இயக்க எதிஹாட் ரயில், பிரெஞ்சு நிறுவனமான கியோலிஸ் இன்டர்நேஷனல் உடன் இணைந்து எதிஹாட் ரயில் மொபிலிட்டி என்ற பெயரில் ஒரு கூட்டு முயற்சியை அறிவித்ததாகக் கூறப்படுகிறது. “இந்த கூட்டாண்மை பயணிகளுக்கு தடையற்ற அனுபவத்தையும், நெட்வொர்க் முழுவதும் பாதுகாப்பான, நிலையான மற்றும் நம்பகமான சேவையையும் வழங்கும்” என்று அல் சுவைதி உறுதியளித்துள்ளார்.
கியோலிஸ் UK, மத்திய கிழக்கு மற்றும் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அலிஸ்டர் கோர்டன், “ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பயணிகள் சேவைகளை கூட்டாக இயக்குவோம், நாங்கள் ரயில்கள் மற்றும் அனைத்து இணைப்புகளையும் இயக்குவோம், இதனால் மக்கள் நாடு முழுவதும் எளிதாக பயணிக்க முடியும். இதில் பேருந்துகள், டாக்சிகள், கார்கள் மற்றும் கார் பார்க்கிங் போன்ற ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குவதும் அடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel