ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ‘Emirates Astronomy Society’ வெளியிட்ட ஆரம்ப வானியல் கணக்கீடுகளின்படி, இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதமானது வரக்கூடிய பிப்ரவரி 19, 2026 வியாழக்கிழமை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகமெங்கிலும் உள்ள இஸ்லாமியப் பெருமக்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில், புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை பிப்ரவரி 17, செவ்வாய்க்கிழமை ஐக்கிய அரபு அமீரக நேரப்படி மாலை 4:01 மணிக்கு தென்படும் என்று சங்கத்தின் தலைவர் இப்ராஹிம் அல் ஜர்வான் தெரிவித்துள்ளார். இருப்பினும், சூரிய மறைவிற்கு ஒரு நிமிடம் கழித்து அது மறையும் என்பதால், அன்று மாலை பிறை தெரியாது. இதன் விளைவாக, அதிகாரப்பூர்வ பிறை பார்க்கும் குழுக்களால், பிப்ரவரி 19 ஆம் தேதி நோன்பின் முதல் நாளாக உறுதிப்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
நோன்பு நேரங்கள் மற்றும் வானிலை முன்னறிவிப்பு
அமீரகத்தை பொறுத்தவரை அபுதாபியில், வரவிருக்கும் ஆண்டிற்கான ரமலான் மாத முதல் நாளில் சுமார் 12 மணி நேரம் 46 நிமிடங்களாக நோன்பு நேரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் பகல் நேரம் அதிகரிக்கும் போது மாத இறுதிக்குள் படிப்படியாக 13 மணி நேரம் 25 நிமிடங்களாக நீட்டிக்கப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
வானிலையைப் பொறுத்தவரை, ரமலான் மாதத்தின் ஆரம்ப நாட்களில் வெப்பநிலை 16°C முதல் 28°C வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாத இறுதியில், வசந்த கால வானிலை முறைகள் உருவாகும்போது, வெப்பநிலை 19°C முதல் 32°C வரை உயரக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், ரமலான் மாதம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், மழைப்பொழிவு அளவு 15 மில்லிமீட்டருக்கும் அதிகமாக இருக்கலாம் என்றும் அல் ஜர்வான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel