துபாய் காவல்துறை சமூக ஊடக தளங்கள் மற்றும் சில வலைத்தளங்களில் பரப்பப்படும் மோசடி விளம்பரங்கள் அதிகரித்து வருவது குறித்து பொதுமக்களை எச்சரித்துள்ளது, குறிப்பாக, அதிகளவு ஊதியத்துடன் பகுதிநேர வேலை வாய்ப்புகளை வழங்குவதாக போலியாக விளம்பரப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
துபாயில் வசிக்கும் பலர் தங்கள் வருமானத்தை அதிகரிக்க பகுதிநேர வாய்ப்புகளைத் தீவிரமாகத் தேடுவதால், மோசடி செய்பவர்கள் இந்தத் தேவையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த மோசடித் திட்டங்களில் மக்களை சிக்க வைப்பதற்காக, மோசடி செய்பவர்கள் அதிக சம்பளம் தருவதாகக் கூறி போலி வேலை விளம்பரங்களை வெளியிடுகிறார்கள் என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, மோசடி செய்பவர்கள் இந்த விளம்பரங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது, பெரும்பாலும் தனிநபர்களை தங்கள் பெயர்களில் வங்கிக் கணக்குகளைத் திறக்க, தெரியாத மூலங்களிலிருந்து நிதியை மாற்ற அல்லது பரந்த மோசடித் திட்டங்களுடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபட மோசடி செய்பவர்கள் வற்புறுத்துகிறார்கள் என்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவரின் தனிப்பட்ட விவரங்கள் குற்றவியல் நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அவர்கள் சட்டப்பூர்வமாக பொறுப்பேற்கப்படலாம் என்று காவல்துறை மேலும் எச்சரித்துள்ளது.
எனவே, பொது குற்றப் புலனாய்வுத் துறையின் மோசடி எதிர்ப்பு மையமானது (Anti-Fraud Centre), ஆன்லைன் வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு எச்சரிக்கையாக இருக்கவும் முதலாளிகளின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்கவும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், தனிநபர்கள் தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களை சரிபார்க்கப்படாத தரப்பினருடன் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர், ஏனெனில் இது பணப் பரிமாற்றங்கள் அல்லது அக்கவுண்ட் மோசடியில் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும் என்பதையும் எடுத்துரைத்துள்ளனர்.
இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான விளம்பரங்களை துபாய் காவல்துறையின் ‘eCrime’ தளம் வழியாகவோ அல்லது 901 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ நேரடியாகப் புகாரளிக்கலாம். பொதுமக்கள் விழிப்புணர்வுதான் இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக முதல் பாதுகாப்பு என்பதையும் துபாய் காவல்துறை குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel