துபாய் குடியிருப்பாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உடற்பயிற்சி நிகழ்வுகளில் ஒன்றான துபாய் ரைடு நிகழ்வு மீண்டும் வந்துள்ளது. துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச்சின் (DFC) ஒரு பகுதியாக நவம்பர் 2 அன்று மீண்டும் நடைபெறும் ‘Dubai Ride 2025’க்கான பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 37,000 க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுநர்களை ஈர்த்த இந்த நிகழ்வு, மீண்டும் நடப்பு ஆண்டில் மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர், துபாய் வாட்டர் கேனல் மற்றும் புர்ஜ் கலீஃபா உள்ளிட்ட துபாயின் மிகவும் பிரபலமான வீதிகள் மற்றும் அடையாளங்கள் வழியாக சைக்கிள் ஓட்டிச் செல்ல அனைத்து நிலைகளையும் சேர்ந்த ரைடர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
இப்போது அதன் ஆறாவது பதிப்பில் நடக்கவிருக்கும், துபாய் ரைடு DFC நாட்காட்டியில் உள்ள நான்கு முதன்மை நிகழ்வுகளில் முதலாவதாகும். இது வெறும் சைக்கிளிங் நிகழ்வு மட்டுமல்ல, இது அமீரகத்தின் ‘Year of Community’ என்ற கருப்பொருளுக்கு ஏற்றாற்போல் ஒற்றுமையைக் கொண்டாடும் அதேவேளையில், நகரம் முழுவதும் ஆரோக்கியம், மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை கொண்டாடுகிறது.
இந்த துபாய் ரெய்டு நிகழ்வில் சைக்கிள் ஓட்டுபவர்கள் இரண்டு அழகிய பாதைகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்: ஷேக் சையத் சாலையில் 12 கிமீ பாதை அல்லது டவுன்டவுன் துபாய் வழியாக 4 கிமீ குடும்ப நட்பு பாதை. அதுமட்டுமின்றி, இந்த நிகழ்வு ஹேண்ட் சைக்கிள்கள், டேன்டெம் பைக்குகள் ஆகியவற்றுக்கான ஆதரவுடன் மாற்றுத்திறனாளி மக்களுக்கான சிறப்பு நுழைவுப் புள்ளியையும் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர, பிரபலமான துபாய் ரைடு ஸ்பீட் லேப்ஸ் (speed laps) மீண்டும் வந்துள்ளது, 12 கிமீ ஷேக் சையத் சாலை கோர்ஸில் தங்கள் வேகத்தை சோதிக்க மேம்பட்ட ரைடர்களுக்கு ஒரு பிரத்யேக வாய்ப்பை இது வழங்குகிறது. இதில் பங்கேற்பாளர்கள் குறைந்தபட்ச 30 கிமீ வேகத்தை பராமரிக்க வேண்டும், ரேசர் பைக்குகளைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் துபாய் ரைடு மார்ஷல்களின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்பீட் லேப் ரைடிற்கான பதிவுகள் அக்டோபர் 6 அன்று தொடங்கும், அதே நேரத்தில் அனைத்து பங்கேற்பாளர்களுக்குமான பிப் சேகரிப்பு (bib collection) அக்டோபர் 29 முதல் நவம்பர் 1 வரை ஜபீல் பூங்காவில் உள்ள துபாய் முனிசிபாலிட்டி 30×30 ஃபிட்னஸ் வில்லேஜில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி சேருவது..??
துபாய் ரைடு மற்றும் ஸ்பீட் லேப்ஸ் இரண்டிற்கும் பங்கேற்பாளர்கள் தனிப்பட்ட பிப்களைப் (bib) பெறுவார்கள்.
பதிவுகள் இப்போது www.dubairide.com இல் திறக்கப்பட்டுள்ளன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel