கடந்த இரண்டு நாட்களாக ஐக்கிய அரபு அமீரகம் சீரற்ற வானிலையை அனுபவித்து வருவதால், ஃபுஜைராவின் சில பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. கனமழை காரணமாக சாலையின் இருபுறமும் ஆங்காங்கே உள்ள பாறை மலைகளில் இருந்து தண்ணீர் நீர்வீழ்ச்சிகள் போல ஆர்ப்பரித்து கொட்டுவதால், குடியிருப்பாளர்களும் வாகன ஓட்டிகளும் இயற்கை அழகை பிரம்மித்து பார்ப்பதுடன் புகைப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இருப்பினும், சில பகுதிகளில், தூசி நிறைந்த காற்று மழையுடன் சேர்ந்து வீசுவதால், வாகனம் ஓட்டும் நிலைமையை சவாலாக மாற்றியதாக ஓட்டுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில், தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) இன்று இரவு 10 மணி வரை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது, நாடு முழுவதும் வசிப்பவர்கள், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் மழை, பலத்த காற்று மற்றும் குறைந்த தெரிவுநிலை உள்ளிட்ட ஏற்ற இறக்கமான வானிலைக்கு தயாராக இருக்குமாறு எச்சரிதுள்ளது.
குடியிருப்பாளர்களுக்கான பாதுகாப்பு எச்சரிக்கைகள்
மோசமான வானிலைக்கு மத்தியில் கூடுதல் கவனம் செலுத்தி பின்வரும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு NCM பொதுமக்களை வலியுறுத்தியது:
- மழை பெய்யும் போது மற்றும் ஈரமான சாலைகளில் எச்சரிக்கையாக வாகனம் ஓட்டவும்.
- பள்ளத்தாக்குகள் மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும்.
- மின்னல் அல்லது இடியுடன் கூடிய நேரங்களில் திறந்த அல்லது உயரமான பகுதிகளைத் தவிர்க்கவும்.
- தூசி மற்றும் குப்பைகளை வீசக்கூடிய மற்றும் சில நேரங்களில் கிடைமட்டத் தெரிவுநிலையைக் குறைக்கக்கூடிய வலுவான காற்று குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவும்.
இதே வானிலை தொடருமா?
NCM வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வருகின்ற செவ்வாய்க்கிழமை வரை நிலையற்ற வானிலை தொடரும், இந்த சமயத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது, சில பகுதிகளில் கனமழையாக மாறும் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக மழை பெய்யும், இருப்பினும் மழை நாட்டின் உட்பகுதிகளிலும் மேற்கு பக்கமும் நீட்டிக்கப்படலாம். சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை கூட ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக, நாட்டில் வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் காற்று வலுவடையக்கூடும், இதனால் அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடலில் தூசி வீசும் மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel