துபாயின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் தனித்துவமான ஒன்றான குளோபல் வில்லேஜை சிறப்பிக்கும் விதமாக, எமிரேட்டிலிருந்து வழங்கப்படும் அனைத்து விசாக்களிலும் இப்போது குளோபல் வில்லேஜ் சீசன் 30 லோகோ இடம்பெறும் என்று அந்த எமிரேட் அறிவித்துள்ளது.
இது குறித்து தெரிவிக்கையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகள் அதே வடிவமைப்பைக் கொண்ட சிறப்பு என்ட்ரி ஸ்டாம்ப்பை பெறுவார்கள் என்று அடையாள மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு அடையாளமாக மாறியுள்ள குளோபல் வில்லேஜின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, குளோபல் வில்லேஜ் சீசன் 30 ஸ்டாம்பை பாஸ்போர்ட்டில் பதித்த பார்வையாளர்களுக்கு குளோபல் வில்லேஜுக்குள் இலவச நுழைவு என்ற பிரத்யேக சலுகையையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இந்த சலுகை புதிய சீசனின் தொடக்க நாளான அக்டோபர் 15 முதல், பத்து நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த சலுகையைப் பெற, பாஸ்போர்ட்டில் உள்ள என்ட்ரி ஸ்டாம்பிற்கு அடுத்ததாக குளோபல் வில்லேஜ் ஸ்டாம்ப் இருக்க வேண்டும், மேலும் சலுகை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளோபல் வில்லேஜ் வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு புதிய சீசனுக்காக அதிகாரப்பூர்வமாக அதன் திறக்கப்படும், இந்த சீசன் இதுவரை இருந்ததை விட மிகவும் அற்புதமான பதிப்பாக இருக்கும் என்று நிர்வாகம் உறுதியளிக்கிறது. அத்துடன் புதிய சீசனின் கருப்பொருள் செய்தியுடன் ஒளிரும் ’30’ ஐ உருவாக்கும் ட்ரோன் மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சியுடன் தொடக்க விழா நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel