தென்னிந்தியாவிற்கு அருகில் அரபிக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாகவும், மேலும் இது வரும் நாட்களில் வெப்பமண்டல காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என்று ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
TconUAE இலிருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் இந்த அமைப்பு மேற்கு நோக்கி நகர்வதைக் காட்டுகின்றன என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், வருகின்ற அக்டோபர் 20, திங்கள்கிழமைக்குள்க்குள் இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று முன்னறிவிப்பு மாதிரிகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இதனால் ஐக்கிய அரபு அமீரகம் பாதிக்கப்படாது என்பதை NCM உறுதிப்படுத்தியிருக்கிறது. வெப்பமண்டல அமைப்பு மேலும் வளர்ந்தவுடன் புயலின் வலிமை மற்றும் பாதை குறித்த முன்னறிவிப்பின் துல்லியம் மேம்படும் என்றும் அது மேலும் கூறியுள்ளது. இதனிடையே, அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதால், தேவைக்கேற்ப புதுப்பிப்புகளை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், அமீரகத்தின் அண்டை நாடான ஓமானின் வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை ஒரு எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பான அறிக்கையில், தென்கிழக்கு அரேபிய கடலில் செயலில் உள்ள வெப்பச்சலன மேகங்கள் உருவாகின்றன என்றும், இது சனிக்கிழமை, அக்டோபர் 18 வாக்கில் வலுப்பெறத் தொடங்கும், பின்னர் அக்டோபர் 19 மற்றும் 21 க்கு இடையில் வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அடுத்த ஐந்து நாட்களுக்கு ஓமானில் நேரடி தாக்கம் எதுவும் எதிர்பார்க்கப்படாது என்றும் ஓமானி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் மேற்கு அரேபியக் கடல் வழியாகக் கடந்து சென்ற வெப்பமண்டல புயல் ஷக்தியைத் தொடர்ந்து இந்த புதிய தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது ஐக்கிய அரபு அமீரகத்தை பாதிக்கவில்லை என்றாலும், தெற்கு அல் ஷர்கியா மற்றும் அல் வுஸ்தா கவர்னரேட்டுகளின் கடலோரப் பகுதிகளில் மேகமூட்டம் உட்பட மறைமுக விளைவுகளை ஓமன் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போதைய நிலவரம் குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்த கட்டத்தில் கவலைப்பட எந்த காரணமும் இல்லை என்றும் ஐக்கிய அரபு அமீரக மற்றும் ஓமானி வானிலை மையங்கள் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel