ADVERTISEMENT

வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்..!! சிறப்பு விமானத்திற்கு தற்போது வாய்ப்பில்லை..!! இந்திய வெளியுறவு துறை அதிகாரி தகவல்..!!

Published: 10 Apr 2020, 1:37 PM |
Updated: 10 Apr 2020, 1:37 PM |
Posted By: admin

கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஏற்பட்ட விமான போக்குவரத்து தடையையொட்டி உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கக்கூடிய இந்தியர்களுக்கும் இந்திய நாட்டிற்கும் இடையேயான போக்குவரத்து தொடர்பு முற்றிலும் நின்று விட்டது. இதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்திலும் எண்ணற்ற இந்தியர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அமீரக அரசு, தங்கள் நாட்டில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டு பயணிகளை அவரவர் நாட்டிற்கு கொண்டு போய் சேர்க்கும் வண்ணம் சிறப்பு விமானங்களை இயக்க அனுமதி அளித்திருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்தியாவிற்கும் சிறப்பு விமானம் இயக்கப்பட வேண்டும் என்று இந்திய நாட்டை சேர்ந்த பல்வேறு நபர்களும் சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால், அமீரகம் மற்றும் இன்னபிற வளைகுடா நாடுகளில் வசிக்கக்கூடிய இந்தியர்கள் அனைவரும் இந்திய நாட்டிற்குள் விமானம் தரையிறங்க விதிக்கப்பட்ட தடை நீங்கும் வரையிலும் விமான பயணத்தை தவிர்க்குமாறு இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பலரும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் சிறப்பு விமானங்களை இயக்க வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

இது பற்றி இந்திய வெளியுறவு துறையை சார்ந்த ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், “வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். வளைகுடா நாட்டு தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்திய மக்களின் பாதுகாப்பிற்கு உறுதி அளித்துள்ளனர்” என்று கூறினார். எனினும் சிறப்பு விமானத்திற்கு தற்போது வாய்ப்பில்லை என மாநில வெளியுறவுத்துறை அமைச்சர் V முரளீதரன் ஒரு மலையாள செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இது குறித்து வெளியுறவுதுறை செயலாளர் விகாஸ் ஸ்வரூப் ஒரு ஆங்கில நாளிதழுக்கு கூறியதாவது, “இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து வகையான பயணிகள் விமான போக்குவரத்தையும் நிறுத்தி வைக்க இந்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளிலேயே இருக்கும்படி கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு காலம் முடிந்து, விமான சேவைகள் தொடங்கிய பின்பு இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவது தொடர்பான முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

இந்திய வெளியுறவு விவகார அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்ட அறிக்கையின்படி, வளைகுடா நாடுகளில் இதுவரையிலும் இந்திய நாட்டினை சேர்ந்த 1400 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT