ADVERTISEMENT

கொரோனா வைரஸ் அறிகுறியுள்ள குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை இலவசம்..!! அபுதாபி சுகாதாரத்துறை அறிவிப்பு..!!

Published: 3 May 2020, 6:28 PM |
Updated: 3 May 2020, 6:29 PM |
Posted By: admin

கொரோனா வைரஸ் தொற்றிற்கான அறிகுறிகளை உணரக்கூடிய குடியிருப்பாளர்கள் இப்போது அபுதாபியில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் கொரோனா வைரஸிற்கு இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று அபுதாபியின் சுகாதாரத் துறை (DOH) இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 3) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கூடுதலாக, வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் இலவசமாக பரிசோதனை செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அபுதாபியில் கொரோனா பரிசோதனையானது பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் அபுதாபி சுகாதார சேவைகள் நிறுவனம் (SEHA) நடத்தும் டிரைவ்-த்ரூ ஸ்கிரீனிங் மையம் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றது. இன்றைய அறிவிப்பின் படி இந்த அனைத்து இடங்களிலும் கொரோனாவிற்கான அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

எனினும், கொரோனாவிற்கான அறிகுறிகள் இல்லாத குடியிருப்பாளர்கள், தாங்கள் வைரசால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினால், அவர்களுக்கு பரிசோதனை செய்ய 370 திர்ஹம்ஸ் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது பற்றி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பரிசோதனை என்பது வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் பராமரிக்க மிக முக்கிய தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும். எனவே குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை கிடைக்கப்பெறுவதையும் மேலும் அவர்கள் பரிசோதனை மையங்களை எளிதாக அணுகுவதை உறுதிசெய்யும் பொருட்டும், அனைத்து பொது மற்றும் தனியார் மருத்துவ நிலையங்கள், கொரோனா வைரஸ் ஸ்கிரீனிங் மையங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்த ஒன்றிணைந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT