ADVERTISEMENT

சென்னையிலிருந்து அபுதாபிக்கு சிறப்பு விமானங்கள் இயக்கும் எதிஹாட் ஏர்வேஸ்..!! ஆன்லைன் புக்கிங் தொடக்கம்..!!

Published: 11 Jul 2020, 7:57 PM |
Updated: 12 Jul 2020, 5:21 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியை தளமாகக் கொண்டு இயங்கும் எத்திஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனம் இந்தியாவில் இருக்கும் ஆறு நகரங்களில் இருந்து அபுதாபிக்கு ஜூலை 12 முதல் 26 வரையிலான நாட்களில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிறப்பு விமானங்களை இயக்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த விமானங்களின் மூலம் அமீரகத்திற்கு திரும்பலாம் என அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து விமான சேவைகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்பொழுது, சென்னை, பெங்களூர், கொச்சி, டெல்லி, ஹைதராபாத் மற்றும் மும்பையில் இருந்து அபுதாபிக்கு விமானங்கள் இயக்கப்படும் என விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், அமீரகத்திற்கு திரும்பும் அனைத்து குடியிருப்பாளர்களும் ICA – வின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்றும் ஒப்புதல் பெறாதவர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னையிலிருந்து அபுதாபிக்கு செல்லும் விமானங்கள் ஜூலை 15, ஜூலை 17, ஜூலை 18, ஜூலை 19, ஜூலை 22, ஜூலை 23, ஜூலை 24, ஜூலை 25 மற்றும் ஜூலை 26 ஆகிய தேதிகளில் இயக்கப்பட இருப்பதாக எதிஹாட் ஏர்வேஸின் அதிகார பூர்வ டிக்கெட் புக்கிங் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மேற்கூறிய நாட்களில் இயக்கப்படவிருக்கும் விமான சேவைகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல், இதே விமானங்களில் இந்தியாவிற்கு செல்லும் பயணிகளை அமீரகத்தில் இருந்து ஏற்றிச் செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த வியாழக்கிழமை, இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசானது ஜூலை 12 ம் தேதி முதல் 26 ம் தேதி வரையிலான நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு திருப்பி அனுப்பும் விமானங்களை இயக்க ஒப்புக் கொண்டதாக அறிவித்திருந்தது.

இந்த ஏற்பாட்டின் படி, ஐக்கிய அரபு அமீரக கேரியர்களால் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் சிறப்பு தனி விமானங்கள் மீண்டும் அமீரகம் திரும்பும் போது, ICA-விடம் (அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம்) ஒப்புதல் பெற்ற ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களை இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு ஏற்றிக்கொண்டு வரலாம் எனக் கூறப்பட்டிருந்தது.

அதே போல், அமீரகத்தில் இருந்து இந்தியர்களை திரும்ப தாய்நாட்டிற்கு அழைத்து செல்லும் இந்தியாவிற்கு சொந்தமான விமானங்கள் இந்தியாவில் இருந்து புறப்படும் போது ICA விடம் ஒப்புதல் பெற்ற அமீரக குடியிருப்பாளர்களை அமீரகத்திற்கு அழைத்து வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“இந்திய அரசாங்கங்களுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான நெருக்கமான மூலோபாய கூட்டாட்சியின் ஒரு பகுதியாகவும், தற்போது இந்தியாவில் இருக்கும் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களுக்கு அமீரகம் திரும்ப உதவுவதற்கும், இரு நாடுகளின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஒரு சிறப்பு ஏற்பாட்டை செயல்படுத்த ஒப்புக் கொண்டுள்ளனர்” என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.