சர்வதேச விமானப் போக்குவரத்து தடையின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஓமான் நாட்டின் செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள், ஓமானிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் இயக்கப்படும் விமானங்கள் மூலம் ஓமான் நாட்டிற்கு திரும்பலாம் என ஓமான் நாட்டின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து ஓமான் நாட்டின் விமான நிலைய உயர் அதிகாரி ஒருவர், “வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் குடியிருப்பாளர்கள் ஓமான் அரசாங்கத்திடம் தேவையான ஒப்புதல் பெற்று தற்பொழுது நாடு திரும்பலாம்” என ஓமான் நாட்டின் ஆங்கில செய்தி ஊடகமான டைம்ஸ் ஆஃப் ஓமானிடம் (Times of Oman) உறுதிப்படுத்தியுள்ளார்.
ஓமான் அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்தியாவில் சிக்கியிருக்கும் ஓமான் நாட்டு குடியிருப்பாளர்கள், இந்தியாவில் இருந்து ஓமானிற்கு இயக்கப்படும் வந்தே பாரத் விமானங்களின் மூலம் நாடு திரும்பலாம் என இந்திய தூதரகமும் தெரிவித்துள்ளது. மேலும் பயணம் மேற்கொள்ளவிருப்பவர்கள் ஓமான் அரசாங்கத்திடம் தேவையான ஒப்புதல் பெறுவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து ஓமானிற்கு திரும்ப விரும்புபவர்கள், பயணத்திற்கான அனுமதியை பெறுவதற்கு தங்களின் ரெசிடென்சி விசாக்களின் தகவல்கள், ஓமான் திரும்புவதற்கான அத்தியாவசிய காரணம் மற்றும் தற்போதய சூழ்நிலையில் நிதி, சமூகம் மற்றும் தனிப்பட்ட அளவில் எதிர்கொண்ட பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு consular@mofa.gov.om எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நாடு திரும்ப விண்ணப்பிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு பயணம் மேற்கொள்ள ஓமான் அரசு அனுமதிக்கும் பட்சத்தில், அந்த விண்ணப்பங்கள் இந்தியாவிற்கான ஓமான் தூதரகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பரிந்துரைக்கப்பட்டு நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செல்லுபடியாகும் விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் ஓமான் நாட்டிற்கு திரும்ப, அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய ஓமான் தூதரகங்களை தொடர்புகொள்ளுமாறும் ஓமான் அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Oman Observer / Times of Oman