ADVERTISEMENT

UAE: கடந்த 5 நாட்களில் இருமடங்காக உயர்ந்த கொரோனா வழக்குகள்..!! தேசிய சுத்திகரிப்பு திட்டம் மீண்டும் திரும்பலாம்..!! அரசு எச்சரிக்கை..!!

Published: 21 Aug 2020, 8:16 AM |
Updated: 23 Aug 2020, 4:18 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீங்கி தற்போது இயல்பு நிலை திரும்பி வந்த நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் வழக்குகள் கடந்த ஐந்து நாட்களாக அமீரகத்தில் அதிகரித்து வருகின்றன.

ADVERTISEMENT

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமீரக அதிகாரிகள் மேற்கொண்ட நாடு தழுவிய தேசிய சுத்திகரிப்பு திட்டம் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், கொரோனா வைரஸ் வழக்குகள் கடந்த வாரம் வரையிலும் வெகுவாக குறைந்து வந்த நிலையில், தற்போது மேலும் வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கைகள் ஏறிக்கொண்டே வருகின்றது. வரும் நாட்களிலும் இதே நிலை தொடர்ந்தால் தேசிய சுத்திகரிப்பு திட்டம் மீண்டும் திரும்பக்கூடும் என்று அமீரக அரசு எச்சரித்துள்ளது.

அமீரகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை 210 என்ற குறைவான எண்ணிக்கையில் இருந்த நிலையில், திங்கள்கிழமை 229 ஆகவும், செவ்வாய்க்கிழமை 365 ஆகவும், புதன்கிழமை 435 ஆகவும் மற்றும் வியாழக்கிழமை 461 ஆகவும் அதிகரித்துக்கொண்டே வருவதால், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து அமீரகத்தின் தேசிய நெருக்கடி மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையத்தின் (NCEMA) செய்தித் தொடர்பாளர் டாக்டர் சைஃப் அல் தஹேரி கூறுகையில், கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தால், அமீரகத்தின் சில பகுதிகளில் தேசிய சுத்திகரிப்பு திட்டம் மீண்டும் திரும்பக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

அமீரகத்தின் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் அப்துல் ரஹ்மான் அல் ஓவைஸ், கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அரசு வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் தொடர்ந்து பின்பற்றவேண்டும் எனவும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கப்பட்ட நாடு தழுவிய தேசிய சுத்திகரிப்பு திட்டம் மூன்று மாதங்களுக்கும் மேலாக அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு, இறுதியாக ஜூன் 24 ம் தேதி அன்று நிறைவு பெறுவதாக அமீரக அரசு அறிவித்திருந்தது.

தேசிய சுத்திகரிப்பு நடைபெறும் நேரங்களில் அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் இயக்க கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே உரிய அனுமதியுடன் வீட்டை விட்டு வெளியேற அனைவரும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது அமீரக அரசு விடுத்துள்ள எச்சரிக்கையின்படி, கொரோனா பாதிப்புகள் காரணமாக மீண்டும் தேசிய சுத்திகரிப்பு திட்டம் தொடங்கப்பட்டால், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து அனைத்து விதமான இயக்க கட்டுப்பாடுகளுக்கும், பொதுமக்கள் பொதுவெளியில் கூடுவதற்கும் தடைவிதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.