ADVERTISEMENT

துபாய்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மீதான தடை நீக்கம்.. செப்டம்பர் 19 முதல் வழக்கம்போல் இயங்கும்..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!!

Published: 18 Sep 2020, 6:43 PM |
Updated: 19 Sep 2020, 10:52 AM |
Posted By: admin

துபாய் மற்றும் இந்தியாவிற்கு இடையே இயக்கப்படும் இந்தியாவின் பட்ஜெட் கேரியரான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமான சேவைகளுக்கு இன்று நள்ளிரவு (செப்டம்பர் 18) முதல் அக்டோபர் 3 வரை என 15 நாட்களுக்கு, துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (Dubai Civil Aviation Authority – DCAA) தற்காலிகமாக தடை விதித்திருந்த நிலையில், தற்பொழுது மீண்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் நாளை முதல் (செப்டம்பர் 19) அறிவிக்கப்பட்ட நேர அட்டவணைப்படி துபாய் விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து, இன்று (செப்டம்பர் 18) துபாயில் இருந்து இந்தியா செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ஷார்ஜா விமான நிலையத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் குறுஞ்செய்தி வாயிலாக பயணிகளுக்கு அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை முதல் துபாய் மற்றும் இந்தியாவிற்கு இடையே ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானங்கள் மீண்டும் வழக்கம்போல் இயங்கும் என தற்போது விமான நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமானது, இந்தியாவிலிருந்து துபாய் விமான நிலையம் வந்தடைந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணம் செய்த பயணிகளில், கொரோனா பரிசோதனையில் நேர்மறை முடிவைப் பெற்ற இரு பயணிகளை விமானத்தில் பயணிக்க அனுமதித்ததற்காக 15 நாட்கள் ஏர் இந்தியா எஸ்பிரஸின் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமும் DCAA விற்கு ஒரு கடிதம் சமர்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்கடிதத்தில் இந்த விவகாரம் குறித்து வருத்தம் தெரிவிப்பதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து இது போன்றதொரு நிகழ்வு இனிமேல் நடக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான விபரங்களையும் அதில் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தே DCAA உயரதிகாரிகளின் ஆலோசனைக்கிணங்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகளின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

DCAA வின் இந்த தற்காலிக தடையை தொடர்ந்து இன்று துபாயிலிருந்து இந்திய செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 5 விமானங்கள் ஷார்ஜாவிலிருந்து இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று துபாயிலிருந்து பயணம் செல்லவிருந்து பயணிக்க முடியாமல் போன பயணிகள் வேறொரு நாளில் தங்களின் பயண தேதியை மாற்றிக்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT