ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன் முறையாக ஒரு தனித்துவமான வடிவமைப்பில், பாதசாரிகள் நான்கு திசைகளையும் கடக்கும் விதமாக ஒரு புதிய பாலத்தை இன்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) திறந்துள்ளது. துபாய் மெரினா பகுதியின் நுழைவாயிலில் அல் கர்பி வீதியுடன் கிங் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் தெருவின் சந்திப்பில் அமைந்துள்ள இந்த பாலத்தில் நான்கு பக்கங்களையும் இணைக்கும் விதமாக நான்கு எஸ்கலேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் 75 மீட்டர் நீளம் கொண்ட மற்றும் அனைத்து திசைகளிலும் பொருத்தப்பட்டுள்ள இந்த எஸ்கலேட்டர்கள் மூலமாக மணிக்கு 8,000 பாதசாரிகளை கையாள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பாலம் திறக்கப்பட்டது குறித்து RTA வின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் இயக்குநர் ஜெனரலும் தலைவருமான மத்தார் அல் டேயர் கூறுகையில், “மெரினா பகுதியில் இந்த அளவில் ஒரு பாலம் அமைப்பது பல கருத்தாய்வுகளால் தூண்டப்பட்டது. பாலம் அமைக்கப்பட்டுள்ள சந்திப்பில் ஒவ்வொரு திசையிலும் உச்ச நேரங்களில் 2,300 பாதசாரிகளும் மற்றும் 2,000 வாகனங்களும் இந்த சந்திப்பைப் பயன்படுத்துகின்றன. வார இறுதி நாட்களில் 1,000 க்கும் மேற்பட்டோர் இந்த சந்திப்பைக் கடந்து JBR பகுதிக்கு செல்கிறார்கள். மேலும், துபாய் டிராம் ஒவ்வொரு ஆறு நிமிடங்களுக்கும் இந்த சந்திப்பை கடக்கிறது. இப்பகுதியில் இரண்டு டிராம் நிலையங்களும் ஒரு பஸ் நிறுத்தமும் உள்ளன. இதன் அருகில் பாதசாரிகளுக்கான பிரத்தியேக சாலை இல்லை” என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது “பாலத்தின் முன்பக்கத்தின் வடிவம் மற்றும் வண்ணம் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களின் வடிவத்துடன் நன்கு பொருந்துகிறது. பாலத்தின் வளைந்த வடிவம் நான்கு திசைகளையும் இணைகிறது. இந்த பாலம் பாதசாரிகள் நான்கு பக்கங்களுக்கு இடையில் சுதந்திரமாக செல்ல உதவுகிறது. இதனால் சிக்னலில் எந்த நிறுத்தமும் ஏற்படாது” என்றும் தெரிவித்துள்ளார்.
துபாயில் பாதசாரிகளுக்காக கட்டப்பட்ட பாலங்களின் எண்ணிக்கை 2006 ல் 13 ஆக இருந்த நிலையில், தற்போது நடப்பு ஆண்டில் அதன் எண்ணிக்கை 129 பாலங்களாக உயர்ந்துள்ளது. மேலும் 2021 மற்றும் 2026 ஆண்டிற்கு இடையில் புதியதாக 36 பாலங்களை உருவாக்கவும் RTA திட்டமிட்டுள்ளது. இந்த பாலங்கள் கட்டிமுடிக்கப்படும் நிலையில், துபாயில் பாதசாரிகளுக்காக கட்டப்பட்ட பாலங்களின் எண்ணிக்கை 165 ஆக உயரும். மேலும் பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக RTA மேற்கொண்டு வரும் முயற்சிகள் துபாயில் சாலையை கடப்பதனால் ஏற்படும் உயிரிழப்பை 76.6 சதவீதம் குறைக்கவும் பெரும் பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
#RTA opened today a 4-directional pedestrian bridge considered the first of its kind in Dubai. Located at the intersection of King Salman bin Abdul Aziz Al Saud Street with Al Gharbi Street at the entrance of Dubai Marina (nearby the JBR).https://t.co/6pqh6VIL3f pic.twitter.com/uX2dpoic4i
— RTA (@rta_dubai) September 19, 2020