ADVERTISEMENT

ஷார்ஜாவில் இன்டெர்சிட்டி பேருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்..!!

Published: 13 Sep 2020, 12:53 PM |
Updated: 13 Sep 2020, 1:01 PM |
Posted By: admin

கொரோனா பாதிப்பின் காரணமாக ஷார்ஜாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்டெர்சிட்டி பேருந்து சேவைகளானது வரும் செப்டம்பர் 15 முதல் 50 சதவீத திறனுடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன், ஜுபைல் பேருந்து நிலையமும் இன்டெர்சிட்டி பேருந்து சேவைகள் தொடங்கவுள்ள அதே நாளில் மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பயணிகளை பாதுகாப்பாக வைத்திருக்க கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் இந்த பேருந்து சேவைகள் வழங்கப்படும் என்று ஷார்ஜாவின் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஷார்ஜா காவல்துறையின் மத்திய செயற்பாட்டு பொது இயக்குனர் டாக்டர் அகமது சயீத் அல் நவ்ர் கூறுகையில், “பயணிகள் பேருந்தில் ஏற அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவர்களின் உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படும். ஒவ்வொரு பயணத்திற்கும் பின்னர் வாகனங்கள் சுத்திகரிப்பு செய்யப்படும் மற்றும் சமூக தூரத்தை உறுதிப்படுத்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருக்கும். பயணத்தின் போது அனைத்து பயணிகளும் முக கவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும். மேலும் அங்கிருக்கும் சானிடைசர்களை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதற்கு முன்னதாக, துபாய், அஜ்மான் மற்றும் ராஸ் அல் கைமா போன்ற அமீரகத்தின் பிற பகுதிகளில் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த இன்டெர்சிட்டி பேருந்து சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.