துபாயில் புதிதாக மூன்று கொரோனா பரிசோதனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 550 சோதனைகளை மேற்கொள்ளும் திறன் கொண்ட இந்த மையங்கள் அல் ரஷீடியா மஜ்லிஸ் (Al Rashidiya Majlis), அல் ஹம்ரியா போர்ட் மஜ்லிஸ் (Al Hamriya Port Majlis) மற்றும் ஜுமேரா 1 போர்ட் மஜ்லிஸ் (Jumeirah 1 Port Majlis) ஆகிய இடங்களில் அமைந்துள்ளதாக துபாய் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. அவை வாரம் முழுவதும், காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக திறக்கப்பட்டுள்ள மூன்று பரிசோதனை மையங்களும் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளதாக DHA-வின் மருத்துவ உதவி சேவைகள் மற்றும் நர்சிங் துறையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஃபரிதா அல் காஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த மையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு துபாய் சுகாதார ஆணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் (800342) ஐ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்த பின்னர் பொதுமக்கள் தங்களின் PCR சோதனைகளை இந்த மையங்களில் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
துபாயின் பொது மற்றும் தனியார் சுகாதாரத் துறை மூலம் கொரோனா பரிசோதனைக்கான திறனை DHA அதிகரித்துள்ளது, தற்பொழுது தினசரி 78,000 க்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.