ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற பகுதிகளில் வழங்கப்பட்ட குடியிருப்பு விசாக்களை வைத்திருக்கும் பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக அமீரகம் திரும்பினால் அவர்கள் பயணத்திற்கு முந்தைய அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஆணையத்திடமிருந்து (ICA) ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்று துபாய் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் இன்று அறிவித்துள்ளார்.
அவர் இதுபற்றி கூறுகையில், “புதிய பயணத் தேவைகளின்படி, அமீரகத்தின் பிற மாகாணங்களில் வழங்கப்படும் குடியிருப்பு விசாக்களை வைத்திருக்கும் பயணிகள், துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக நாட்டிற்கு திரும்புவதற்கு ICA ஒப்புதல் தேவை” என்று கூறியுள்ளார். மேலும், துபாய் குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் திரும்புவதற்கு பொது வதிவிட மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் இயக்குநரகத்தின் (GDRFA) ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
துபாய் விமான நிலையத்தின் வருகை முனையத்தில் (Arrival Terminal) சிக்கித் தவிக்கும் பல பயணிகளின் நிலை குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக துபாய் விமான நிலையங்கள் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அமீரக அரசின் வழிகாட்டுதல்கள்படி உரிய அனுமதியின்றி பல்வேறு நாடுகளிலிருந்து துபாய் வந்தடைந்த பயணிகள் ஏராளமானோர் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது. எனினும் சிக்கித்தவிக்கும் பயணிகளின் சரியான எண்ணிக்கை இன்னும் சரிவர தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெவ்வேறு நாடுகளிலிருந்து நேற்று புதன்கிழமை அதிகாலை முதல் துபாய் வந்த பல பயணிகள் தற்போது விமான நிலையத்திலேயே சிக்கி தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் தவிர்த்து அமீரகத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் பல குடியிருப்பாளர்கள் துபாயில் தரையிறங்கிய பின்னர் இம்மிகிரேஷன் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகளின் பயண ஆவணங்கள் குறித்து இமிகிரேஷனில் சரிபார்க்கும் போது அவர்கள் அமீரகத்திற்கு திரும்ப அனுமதிக்கப்படவில்லை என்பதை காட்டுவதாகவும், அதைத் தொடர்ந்து பயணிகள் விமான நிலையத்தை விட்டு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது விமான நிலையத்தில் சிக்கித்தவிக்கும் பயணிகள் குறித்து துபாய் விமான நிலையங்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிற சேவை நிறுவனங்களுடன் இணைந்து நமது பயணிகளின் வசதியை உறுதிசெய்து விரைவில் இந்த நிலைமையை தீர்க்கும் என்றும் துபாய் விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.