அபுதாபியின் தெருக்களில் நீண்ட காலமாக ஒழுங்கான பராமரிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டிருக்கும் பத்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் அனைத்தும் மிக அழுக்காகவும் வாகனம் முழுவதும் தூசி சேர்ந்து பொது இடங்களில் காணப்பட்டதால் அவற்றை பறிமுதல் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதே போன்று, நகராட்சி விதிகளை மீறியதற்காக 66 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், அபுதாபி மாநகராட்சி ஆய்வாளர்கள் 43 வாகன ஓட்டிகளுக்கு அவர்களின் வாகனங்களை தெருக்களில் இருந்து வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நகரத்தின் அழகியல் தோற்றத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம்” குறித்து சமூகத்திற்கு அறிவுறுத்துவதற்காக ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்துடன் கூட்டு பிரச்சாரத்தின் போது நகராட்சி அதிகாரிகளால் இந்த விதிமீறல்கள் அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, இவ்வாறு ஒழுங்கான பராமரிப்பு இல்லாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு மூன்று நாள் நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இந்த மூன்று நாட்களுக்குள் அந்த வாகனம் தெருக்களில் இருந்து அகற்றப்படா விட்டால் அது பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட விதிமுறைகளானது அனைத்து வாகனங்கள், டிரெய்லர்கள், படகுகள் மற்றும் இயந்திரங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
அபுதாபி மாநகராட்சியானது அனைத்து சமூக உறுப்பினர்களுக்கும் தங்கள் வாகனங்களை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு 3000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.