அபுதாபியின் மினா துறைமுகத்தில் கட்டப்பட்டிருந்த மினா பிளாசா டவர்ஸை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 வினாடிகளில் வெற்றிகரமாக இடித்த பின்னர் மோடன் ரியல் எஸ்டேட் புதிய உலக சாதனை படைத்தது என்று அபுதாபி ஊடக அலுவலகம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அபுதாபி காவல்துறை, அபுதாபி சிவில் பாதுகாப்பு மற்றும் தேசிய நெருக்கடி மற்றும் பேரழிவுகள் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் நகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறை (DMD) இந்த நடவடிக்கையை நியமித்தது.
165 மீட்டர் உயரமுள்ள 144 மாடிகளை வெற்றிகரமாக இடித்ததன் மூலம் இந்த சாதனையானது தற்பொழுது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் வெடிபொருட்களால் இடிக்கப்பட்ட மிக உயரமான கட்டடமாக பட்டியலிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Modon Properties set a new Guinness World Records™️ title for the ‘Tallest building demolished using explosives (controlled demolition)’, after the successful demolition of Mina Plaza towers in Mina Zayed area. The 165m, 144-floors towers were demolished in 10 seconds.
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) November 27, 2020
இந்த கட்டிட இடிப்பின் போது கட்டிடங்கள் தகர்க்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளைத் தணிப்பதற்கும், வெடிப்பின் விளைவாக ஏற்படும் தூசி மேகங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் மிக உயர்ந்த சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.
The demolition of Mina Plaza Towers, part of Mina Zayed redevelopment project, was successfully and safely concluded in 10 seconds. @AbuDhabiDMT would like to thank all participating parties and the public for their cooperation and adherence to precautionary safety measures.
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) November 27, 2020
கட்டிடங்களை தகர்க்கும் போது, அப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த மினா போர்ட் பகுதியில் (மினா சையத்) இருக்கும் கடைகள் மற்றும் சந்தைகள் தற்காலிகமாக நேற்று (வியாழக்கிழமை) இரவு 7 மணி முதல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணி வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்காலிகமாக மூடப்படுவது மீன் சந்தை, பழங்கள் மற்றும் காய்கறி சந்தை, கூட்டுறவு சமூகம், கால்நடை சந்தை மற்றும் இறைச்சிக் கூடம் ஆகியவற்றை உள்ளடக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.
மினா சையத் பகுதியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட முடிக்கப்படாத கட்டிடங்கள் இடிக்கப்படுவதன் மூலம் அப்பகுதியில் குடியிருப்புகள், பிரம்மாண்ட மீன் சந்தை மற்றும் இது போன்ற பல்வேறு கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுற்றுலா மற்றும் வணிக தலமாக மாற்றப்படவிருப்பதாக நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை (Department of Municipalities and Transport) தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.