கொரோனாவிற்கான PCR சோதனை முடிவுகளை வெறும் 30 நிமிடங்களில் வழங்கக்கூடிய மற்றும் பிராந்தியத்தில் முதல் முறையாக ஒரு புதிய கொரோனா சோதனை மையம் ஒன்று அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் (AUH) டெர்மினல் 3 ல் தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய மையத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து அபுதாபி விமான நிலையம் வரும் பயணிகளிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு, பயணிகள் இமிகிரேஷன் மற்றும் லக்கேஜ் செயல்முறைகளை முடிப்பதற்குள் அவர்களின் சோதனை முடிவுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத் தரம் வாய்ந்த பயணிகள் காத்திருப்பு மண்டபம், வசதியான இருக்கைகள், குடும்பங்களுக்கு தனி சோஃபாக்கள், ஒரு விற்பனை இயந்திரம், தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் கழிப்பறைகள் மற்றும் மிக முக்கியமாக, PCR சோதனை முடிவுகளை பெற்றுக்கொள்ளும் கவுண்டர் என அனைத்தும் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 நோய்தொற்று பாதித்தவர்களை அடையாளம் காண்பது, நோய்த்தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவது மற்றும் அபுதாபியை மக்கள் அனைவருக்கும் முற்றிலும் பாதுகாப்பாக வைப்பது எனும் முயற்சியின் அடிப்படையாக இது தொடங்கப்படவிருப்பதாக இந்த திட்டத்தின் நோயாளி நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பார்த்தா புரோடிம் பானர்ஜி கூறியுள்ளார்.
மேலும் “இந்த முயற்சியின் பார்வை, சிந்தனை, திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் ஆகியவை முன்மாதிரியானவை. அபுதாபி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் ஈடுபாடையும் முழு உலகமும் கவனிக்க வேண்டும். உலகில் உள்ள விமான நிலையங்களில் இதுவே முதல் முயற்சி என்று நான் நினைக்கிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையம் வரும் பயணிகளின் மாதிரிகள் சேகரிப்பதில் இருந்து அதன் முடிவை நிரூபிப்பது மற்றும் அதன் பின்னர் தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தும் செயல்முறை என்று இந்த திட்டம் செயல்படவிருப்பதாகவும் கூறியுள்ளார். மாதிரி சேகரிக்கப்பட்டதும், பயணிகளுக்கு ஒரு பார் குறியீடு வழங்கப்படும், பின்னர் அவர்கள் காத்திருக்கும் பகுதிக்குச் செல்வார்கள், அங்கு அவர்களின் எண் அழைக்கப்படும் வரை அதிகபட்சம் 30 நிமிடங்கள் செலவிட வேண்டும் எனவும் இந்த மையத்தில் முழு செயல்முறை 75 முதல் 90 நிமிடங்கள் வரை ஆகலாம் எனவும் திட்டத்திற்கான நோயாளி நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பார்த்தா புரோடிம் பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் இது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அபுதாபிக்கு ஒரு பெருமை மிக்க சாதனை எனவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


