ADVERTISEMENT

சவூதியில் வசிக்கும் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி..!! சுகாதார அமைச்சகம் தகவல்..!!

Published: 24 Nov 2020, 10:42 AM |
Updated: 24 Nov 2020, 10:47 AM |
Posted By: admin

உலகெங்கிலும் கொரோனாவிற்கான தடுப்பூசி சோதனை மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், தடுப்பூசியானது சவூதி அரேபியாவில் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள சுகாதார அமைச்சகம் சவூதியில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசிகளை இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்று திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

வரும் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சவூதியில் வசிக்கும் 70 சதவீத மக்களுக்கு போதுமான தடுப்பூசிகளை வழங்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்று அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சவூதியின் துணை சுகாதார அமைச்சர் டாக்டர் அப்துல்லா அல்-அஸிரி அவர்கள் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், “சவூதி அரேபியா பொது சுகாதார நோக்கங்களுக்காக தடுப்பூசிகளை வழங்கவிருக்கிறது. எனவே அவை கட்டணம் வசூலிக்கக்கூடிய பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்படாமல் இலவசமாக வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், இதுவரையிலும் கொரோனாவின் நோய்தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் நபர்களுக்கு வரும் மாதங்களில் தடுப்பூசி பிரச்சாரத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சக அதிகாரிகள் குறிப்பிட்ட விவரக்குறிப்புகளை பூர்த்தி செய்யும் தடுப்பூசிகளை மட்டுமே சவூதி அரசு பயன்படுத்தும் என்றும் அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் இதுவரை 355,000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 5700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு நெறிமுறைகளை தங்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.