ADVERTISEMENT

ராஸ் அல் கைமாவிற்கு விமான சேவையை தொடங்கும் ஸ்பைஸ்ஜெட்..!! நவம்பர் 26 முதல் சேவை தொடக்கம்..!!

Published: 21 Nov 2020, 12:18 PM |
Updated: 21 Nov 2020, 12:21 PM |
Posted By: admin

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்குப் பிறகு தற்பொழுது அமீரகம் இயல்பான பொருளாதார நடவடிக்கைகளுக்கு சீராக திரும்புவதைக் குறிக்கும் வகையில், நவம்பர் 26 முதல் இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) ராஸ் அல் கைமா மற்றும் இந்தியா இடையே விமான சேவைகளை இயக்கவிருப்பதாக ராஸ் அல் கைமா சர்வதேச விமான நிலையம் (RAK) இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஆரம்பக்கட்டமாக வாரத்திற்கு இரண்டு முறை விமான சேவைகளை இயக்கும் என்றும், ஸ்பைஸ்ஜெட்டின் முதல் சேவையானது பயணிகளை டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும், இதனால் பயணிகள் இந்தியாவுக்குள் 28 இடங்களுக்கு செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராஸ் அல் கைமா சர்வதேச விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் கன்னா அவர்கள் கூறுகையில், “கொரோனா தொற்றுநோயின் பரவலுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகம் இயல்பு நிலைக்கு திரும்புவதில் ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமான சேவைகளை RAK விமான நிலையத்தில் தொடங்குவது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய வெளிநாட்டினர் கிட்டத்தட்ட 3.5 மில்லியன் பேர் வசிக்கின்றனர் மற்றும் அமீரக மக்கள்தொகையில் 27 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இது எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை கட்டாயமாக்குகிறது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா ஒருவருக்கொருவர் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளாக இருப்பதால், அமீரகத்தின் வணிகத்திலும் பொருளாதாரத்திலும் RAK விமான நிலையம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ஸ்பைஸ்ஜெட் வர்த்தக நடவடிக்கைகளை RAK விமான நிலையத்தில் இருந்து தொடங்கும் என்றும், முதல் கட்டமாக 189 பயணிகள் திறன் கொண்ட போயிங் 737-800 விமானம் SG 160, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 22:30 மணிக்கு புறப்பட்டு, ராஸ் அல் கைமா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும். பின்னர் வெள்ளிக்கிழமை மற்றும் திங்கள் அன்று 01:50 மணிக்கு RAK விமான நிலையத்திலிருந்து SG 161 விமானம் புறப்பட்டு, டெல்லியில் 06:40 மணிக்கு தரையிறங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. வரும் காலத்தில் இந்தியா முழுவதும் கூடுதல் விமான சேவைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவிற்கு இடையே குடும்பங்களை மீண்டும் இணைப்பதிலும் ஸ்பைஸ்ஜெட் முக்கிய பங்கு வகிக்கின்றது. கொரோனா வைரஸுக்கு பிந்தைய கட்டத்தில் நாம் நுழையும் போது, ​​ராஸ் அல் கைமாவின் தற்போதைய வளர்ச்சியில், குறிப்பாக அதன் சுற்றுலாத் துறையில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம், தற்பொழுது பயணக் கட்டுப்பாடுகள் குறைந்து வருவதால் பார்வையாளர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று ஸ்பைஸ்ஜெட்டின் தலைமை நிர்வாக இயக்குனர் அஜய் சிங் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT