ADVERTISEMENT

சட்ட விரோத குடியிருப்பாளர்கள் நாடு திரும்ப இரண்டாவது பொதுமன்னிப்பை அறிவித்த குவைத்..!! டிசம்பர் 1 முதல் ஒரு மாத கால அவகாசம்..!!

Published: 26 Nov 2020, 5:09 PM |
Updated: 26 Nov 2020, 5:15 PM |
Posted By: admin

குவைத் நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டு, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் எந்தவொரு அபராதமும் செலுத்தாமல் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பினர். இந்நிலையில், தற்பொழுது இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நாட்டில் சட்டவிரோதமாக வாழும் வெளிநாட்டினருக்கு குவைத் அரசு மீண்டும் பொது மன்னிப்பை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் பொது மன்னிப்பானது ஜனவரி 1, 2020 க்கு முன்னர் சட்ட விரோதமாக வசித்து வந்த வெளிநாட்டவர்களுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி, சட்ட விரோத குடியிருப்பாளர்கள் தங்களின் அபராதங்களை செலுத்திய பின்னர் தங்களின் விசா நிலையை சட்டப்பூர்வமாக்கிக் கொள்ளலாம் அல்லது நாட்டிலிருந்து வெளியேறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டிசம்பர் 1 முதல் 31 வரையிலான ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் குவைத்தில் தற்காலிக விசாக்கள் வைத்திருப்பவர்கள் (தானாகவே நவம்பர் மாதம் வரை செல்லுபடி காலம் நீட்டிக்கப்பட்டவர்கள்) தங்களின் விசா நிலையை நவம்பர் 30 ம் தேதிக்குள் சட்டபூர்வமாக மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது இம்மாத இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

நாட்டில் தங்குவதை சட்டப்பூர்வமாக்க திட்டமிட்டுள்ள வெளிநாட்டவர்கள் டிசம்பர் 1 முதல் 31 வரை வதிவிட விவகாரத் துறைக்குச் (Residency Department) சென்று தேவையான அபராதங்களை செலுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்களுக்கு வதிவிட அனுமதி (residence permit) வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், நாட்டை விட்டு வெளியேற விரும்புபவர்கள் தங்களின் அபராதங்களை செலுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு நாட்டை விட்டு வெளியேறும் நபர்கள் மீண்டும் குவைத் திரும்புவதற்கு எந்த ஒரு தடையும் இல்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குவைத் அரசு அறிவித்துள்ள இந்த பொது மன்னிப்பை பயன்படுத்தி தங்களது நிலையை மாற்றிக்கொள்ளாமலோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறாமலோ இருக்கும் நபர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அவர்கள் மீண்டும் குவைத் வருவதற்கு தடை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவித்த பொது மன்னிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் நாடு செல்ல சிறப்பு விமானங்களை குவைத் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது குவைத் நாட்டில் சரியான வதிவிட அனுமதி இல்லாத 30,000 வெளிநாட்டவர்கள் வசிப்பதாகவும் ஒரு அறிக்கையில் கூறப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.