ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என பெரிய விடுமுறைகள் அடுத்த மாதத்தில் வரவிருக்கும் சூழ்நிலையில், கடுமையான கோவிட் -19 பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும், விடுமுறை கொண்டாட்டங்கள் விர்ச்சுவல் வாயிலாக நடத்தப்பட வேண்டும் என்றும் குடியிருப்பாளர்களுக்கு நினைவுபடுத்தப்படுவதாக அமீரக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் மூலம் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள் (private gatherings) தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
“விடுமுறை தின கொண்டாட்டங்களுக்கு எந்த கூட்டங்களும் அனுமதிக்கப்படவில்லை. நண்பர்கள் உறவினர்களிடையே உணவு அல்லது பரிசுகளை பரிமாற முடியாது. கொண்டாட்டங்களில் மக்கள் விர்ச்சுவல் வாயிலாக பங்கேற்க முடியும், ”என்று ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
மேலும் புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்களில் “மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் நிகழ்ச்சிகளை அரசின் முன் ஒப்புதல் இல்லாமல் நடத்த முடியாது” என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக செயல்படுத்தப்படும், முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாகும் மற்றும் வெப்ப கேமராக்கள் அனைத்து இடங்களிலும் நிறுவப்படும், சிறப்பு பயிற்சி பெற்ற பணியாளர்கள் களத்தில் இருக்க வேண்டும், மேலும் அனைவரும் இரண்டு மீட்டர் சமூக இடைவெளி விதியைக் கடைப்பிடிக்க வேண்டும் போன்ற நடைமுறைகள் கடுமையாக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு, ஒரு நியமிக்கப்பட்ட பணியாளர் அந்த இடத்தில் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வார் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மக்கள் கூடும் அனைத்து பொது இடங்களும் 24 மணி நேரமும் சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.