ADVERTISEMENT

டிசம்பர் முதல் அமலுக்கு வரும் புதிய சட்டம்..!! வணிகங்களின் 100% உரிமையை வெளிநாட்டினருக்கே அளிக்க அமீரக அரசு அனுமதி..!!

Published: 23 Nov 2020, 3:05 PM |
Updated: 23 Nov 2020, 5:28 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டவர்கள் தங்களின் நிறுவனங்களைத் துவங்க இதுவரையிலும் அமீரக நாட்டை சேர்ந்த ஒருவரின் (எமிராட்டி) ஸ்பான்சர் தேவை என்பது கட்டாயம் ஆகும். இதுநாள் வரையிலும் அமலில் இருந்து வந்த அமீரக அரசின் இந்த சட்ட விதிமுறையானது தற்பொழுது திருத்தம் செய்யப்பட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரும் டிசம்பர் 1 முதல், உள்ளூர் குடிமக்களின் ஸ்பான்சர் இல்லாமலேயே அமீரகத்தில் தங்களின் நிறுவனங்களை முழுமையாக செயல்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் உத்தரவின் பேரில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கள் நிறுவனத்தின் கிளைகளை திறக்க விரும்பும் நிறுவனங்களும் எமிராட்டி ஸ்பான்சர் இல்லாமல் தொழில் தொடங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. முதலீடுகள் மற்றும் திட்டங்களுக்கான இடமாக பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலையை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக இந்த புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சீர்திருத்தங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்நிய முதலீட்டை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள் அமீரகத்தில் வணிகம் செய்வதற்கான செலவுகளைக் குறைத்து, வணிகம் செய்வதை எளிதாக்கும் என்றும், அவ்வாறு தொடங்கப்படும் ஒரு நிறுவனத்தின் தலைவராக (chairman) எமிராட்டி இருப்பது கட்டாயமில்லை என்றும், இயக்குநர்கள் குழுவிலும் (board of directors) எமிராட்டி பெரும்பான்மை இருக்க வேண்டியதில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எண்ணெய் மற்றும் எரிவாயு (oil and gas), பயன்பாடு மற்றும் போக்குவரத்து (utility and transport) மற்றும் இது போன்ற சில துறைகளில் உள்ள நிறுவனங்கள் இந்த மாற்றங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்பொழுது வரையிலும், 2015 ஆம் ஆண்டின் வணிக நிறுவனங்கள் சட்டம் 2 இன் கீழ், வெளிநாட்டு பங்குதாரர்கள் ஒரு நிறுவனத்தின் பங்கில் அதிகபட்சமாக 49 சதவீதத்தை வைத்திருக்க முடியும் என்பதும் எமிராட்டி தனிநபர் அல்லது உள்ளூர் நிறுவனம் மீதமுள்ள 51 சதவீத பங்கை வைத்திருக்க முடியும் என்பதும் அமலில் இருந்து வந்தது. இருப்பினும், வெளிநாட்டு நேரடி முதலீட்டுச் சட்டம், 2018 ஆம் ஆண்டின் 19-ம் இலக்க ஆணையின் கீழ், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர் உரிமையின் மீதான கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்களை அமீரக அரசு ஏற்கனவே வகுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT