துபாய் மெட்ரோவின் சிவப்பு நிற வழித்தடத்தின் இறுதி மெட்ரோ நிலையமான ஜெபல் அலி மெட்ரோ நிலையத்திலிருந்து துபாய் எக்ஸ்போ 2020 வரையிலும் நீட்டிப்பு செய்யப்பட்டிருந்த புதிய மெட்ரோ பாதையானது வரும் ஜனவரி 1, 2021 அன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருப்பதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) நிர்வாக இயக்குநர்கள் குழுவின் இயக்குநர் ஜெனரல் மத்தார் முகமது அல் தயர் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதியதாக நீட்டிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய வழித்தடத்தில், ஜெபல் அலி நிலையம் (Jebel Ali interchange station), தி கார்டன்ஸ் (The Gardens), டிஸ்கவரி கார்டன்ஸ் (Discovery Gardens) மற்றும் அல் ஃபுர்ஜான் நிலையங்கள் (Al Furjan Stations) ஆகிய நான்கு மெட்ரோ நிலையங்களும் ஜனவரி 1 முதல் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும் மேலும் இந்த வழித்தடத்தில் இருக்கக்கூடிய மீதமுள்ள மூன்று மெட்ரோ நிலையங்கள் பின்னர் திறக்கப்படும் என்றும் முகமது அல் தயர் அறிவித்துள்ளார்.
மேலும் “270,000 மக்கள் வசிக்கும் அடர்த்தியான மாவட்டங்களான தி கார்டன்ஸ், டிஸ்கவரி கார்டன்ஸ் மற்றும் அல் ஃபுர்ஜான், ஜுமேரா கோல்ஃப் ரியல் எஸ்டேட்ஸ், மற்றும் துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் போன்ற பகுதிகளுக்கு மெட்ரோ சேவையை தொடங்குவதன் மூலம் RTA புத்தாண்டைக் கொண்டாடவிருக்கிறது. ஜனவரி முதல் தேதியன்று மெட்ரோ சேவைகள் தொடங்கப்படவுள்ள நிலையங்களைத் தேர்ந்தெடுப்பது நிலையத்திற்கு அருகிலுள்ள மக்கள்தொகை அடர்த்தி, எதிர்பார்த்த எண்ணிக்கையிலான பயன்பாட்டாளர்கள், நிலையங்கள் சேவை செய்யும் பகுதியில் வணிக நடவடிக்கைகள் மற்றும் ஒவ்வொன்றிலும் பிற பொது போக்குவரத்து வழிமுறைகளுடனான இணைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார்.
மேலும் மெட்ரோ ரயில்கள் மற்றும் அமைப்புகளின் நிலையான சோதனை, பயணிகள் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட சோதனை, கணினி நம்பகத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை சரிபார்க்க மேற்கொள்ளப்பட்ட செயல்பாட்டு சோதனை, வணிக சேவையைத் தொடங்குவதற்கு முன் தயார்நிலையைச் சரிபார்க்க மெட்ரோ சேவையின் ஆபரேட்டரால் மேற்கொள்ளப்பட்ட செயல்பாட்டு சோதனைகள் உள்ளிட்ட நான்கு செயல்பாட்டு சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து இந்த வழித்தடத்தில் மெட்ரோ சேவை பொதுமக்களுக்காக திறக்கப்படவிருப்பதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
புதிய வழித்தடத்தில் செல்லும் மெட்ரோ ரயிகளின் சேவை நேரங்கள்…
வார நாட்களான சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை ஜெபல் அலி மற்றும் அல் ஃபுர்ஜான் ஆகிய மெட்ரோ நிலையங்களுக்கு இடையே வழங்கப்படும் இந்த புதிய மெட்ரோ சேவை அதிகாலை 5:00 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12:00 மணி வரையிலும் பயன்பாட்டில் இருக்கும் எனவும் இரு திசைகளிலிருந்தும் மேல் குறிப்பிட்ட நேரத்தில் இந்த சேவை தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வார இறுதி நாளான வியாழக்கிழமை அன்று முதல் பயணம் காலை 5:00 மணிக்கு தொடங்கும் என்றும் கடைசி பயணம் மறுநாள் அதிகாலை 1:00 மணிக்கு முடியும் என்றும், அதேபோன்று வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை முதல் பயணம் காலை 10:00 மணிக்கு தொடங்கி இறுதியாக மறுநாள் அதிகாலை 1:00 மணிக்கு முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெபல் அலி மற்றும் அல் ஃபுர்ஜான் ஆகிய மெட்ரோ நிலையங்களுக்கு இடையிலான இந்த பயணம் ஆறு நிமிடங்கள் என்றும் 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை என்ற அடிப்படையில் ஒரு மணி நேரத்திற்கு ஆறு ரயில்கள் பயன்பாட்டில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த புதிய வழித்தடத்தில் ஒரு திசையில் மணிக்கு 4,176 மெட்ரோ பயன்பாட்டாளர்களுக்கு சேவை வழங்க முடியும் ”என்றும் அல் தயர் கூறியுள்ளார்.