ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சீன நிறுவனத்தை சேர்ந்த சினோபார்ம் கோவிட் -19 தடுப்பூசியை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ததை அடுத்து குடியிருப்பாளர்கள், சுகாதார அதிகாரிகள் பட்டியலிட்டிருக்கும் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சென்று கொரோனாவிற்கான தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி இந்த தடுப்பூசியானது 86 சதவீத செயல்திறன் மிக்கதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு தற்பொழுது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதனை தொடர்ந்து, இந்த தடுப்பூசியானது அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பாளர்கள் பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 31,000 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டது என்றும் தன்னார்வ தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கிட்டத்தட்ட 100,000 பேர் ஏற்கனவே தடுப்பூசி பெற்றுள்ளதாகவும் ஐக்கிய அரபு அமீரக சுகாதார அமைச்சின் துணை செயலாளர் ஜமால் அல் காபி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது இந்த தடுப்பூசியானது அபுதாபி SEHA-வினால் நடத்தப்படும் அனைத்து கிளினிக்குகள், தனியார் மருத்துவ நிறுவனங்களான VPS ஹெல்த்கேர் மற்றும் NMC மருத்துவமனைகளுக்கு சொந்தமான அனைத்து மையங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில், குடியிருப்பாளர்கள் துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் கள மருத்துவமனையில் (Dubai Parks and Resorts Field Hospital) தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஷார்ஜாவில் உள்ள வசித் மருத்துவ மையத்தில் (Wasit Medical Centre in Sharjah) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை தடுப்பூசி சேவையானது கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அஜ்மானில், மக்கள் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் அல் ஹுமைதியா மையத்திற்கு (Al Humaidiya Centre) சென்று தடுப்பூசியினை போட்டுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. உம் அல் குவைன் மற்றும் ஃபுஜைராவில் முறையே அல் பைத் மெட்வாஹித் மையம் (Al Bait Metwahid centre) மற்றும் முராஷித் மருத்துவ மையத்தில் (Murashied Medical Centre) தடுப்பூசி சேவைகள் கிடைக்கிறது.
தடுப்பூசியினைப் போட்டுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் தாங்கள் செல்லவிருக்கும் மருத்துவ மையத்திற்கு முன்பதிவு செய்து கொண்டு தடுப்பூசி சேவையினைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு சென்று தடுப்பூசி பெறும் நபர்கள் 21 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மருத்துவ மையத்திற்கு சென்று தடுப்பூசிக்கான இரண்டாவது டோஸை (dose) பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.