ஐக்கிய அரபுஅமீரகத்தில் வசிக்கும் அமீரக நாட்டவர்கள், பிற நாட்டு குடியிருப்பாளர்கள் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு அமீரக நாட்டின் சட்ட விதிமுறைகள் மற்றும் அமீரகத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்ற நடைமுறைகளுக்கு உதவும் விதமாக அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் “மசவுலியா (Masouliya)” என்று அழைக்கப்படும் ஒரு புதிய சமூக சட்ட விழிப்புணர்வு மையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு மையமானது சமூகத்திற்கு உதவும் வகையில் நாட்டின் சட்டங்களைப் புரிந்துகொள்ளவும், சட்ட நடைமுறைகளைப் பற்றி தெரியாதவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதை நோக்கமாகக்கொண்டும் துவங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மையமானது நீதிமன்றங்களில் வழக்கு தொடர ஒரு வழக்கறிஞரின் சேவையை பெற முடியாதவர்களுக்கு உதவும் வகையிலும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வழக்கறிஞர் நாசர் மலல்லா கூறுகையில், அரபு பிராந்தியத்திலேயே முதல் முறையாக தொடங்கப்பட்டிருக்கும் இந்த விழிப்புணர்வு மையத்தின் முக்கிய நோக்கம் அமீரக சட்டங்கள் குறித்த கருத்தை சமூகத்தில் பரப்புவதாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த விழிப்புணர்வு மையத்தின் வல்லுநர்கள் மக்களுக்கு தாங்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்களைப் பற்றிய கருத்துக்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். மேலும், அமீரகத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி மக்களுக்கு கற்பிக்கப்படும். இந்த உலகமானது கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக மட்டுமல்லாமல், சமூக ஊடக தளங்களால் உருவாக்கப்பட்ட தாக்கத்தின் காரணமாகவும் புதிய உலகாக மாறியிருக்கின்றது”.
“மக்கள் சைபர் சட்டங்கள் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கலாம். எந்தவொரு சட்டத்தைப் பற்றியும் அல்லது சமூக ஊடகங்களில் தாங்கள் பதிவிடுவதில் எது சரியானது மற்றும் தவறானது போன்ற எளிய விஷயங்கள் குறித்தும் மக்கள் சந்தேகம் இருந்தாலும் அவர்கள் இந்த மையத்தை அணுகலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு வழங்கும் ஆலோசனைகள் மற்றும் உதவி…
தங்கள் உரிமைகளை கோருவதற்கான சரியான வழிமுறைகளை பற்றி அறியாத தொழிலாளர்கள் அல்லது குடியிருப்பாளர்களுக்கும் இந்த மையம் சட்ட ஆலோசனைகளை வழங்கும் என்று நாசர் கூறியுள்ளார். உதாரணமாக, தொழிலாளர்கள் அவர்களின் முதலாளிகளிடமிருந்து பெறக்கூடிய இறுதி செட்டில்மென்ட் அல்லது கார் விபத்துக்களுக்கான இழப்பீடு அல்லது சொத்து தகராறு மற்றும் இது போன்ற பிறவற்றிற்கும் இம்மையத்தில் இருந்து ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
தொழிலாளர் பிரச்சனைகளின் போது, சில ஊழியர்களுக்கு தாங்கள் முதலில் தொழிலாளர் அலுவலகத்தில் ஒரு கோப்பைத் (file) திறக்க வேண்டும் என்று தெரியாது. எனவே, அவர்களுக்கு இம்மையம் பின்பற்ற வேண்டிய சரியான நடவடிகைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கி தெளிவுபடுத்தும் என்றும் மேலும் குறைந்த வருமானம் உள்ள குடியிருப்பாளர்களுக்கோ அல்லது தொழிலாளர்களுக்கோ இந்த மையம் சட்ட உதவிகளை வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
“சில நீதிமன்ற வழக்குகளில் ஒரு நபர் ஒரு வழக்கறிஞரின் சேவையை பெற முடியாவிட்டால், இம்மையம் சட்ட ஆலோசனைகளை வழங்க முடியும். மேலும், சில நீதிமன்ற வழக்குகளுக்கு ஏழை நபராக இருந்தால் சட்ட நிபுணரை நியமிக்க இந்த மையம் உதவக்கூடும். இந்த சமயங்களில் அந்த நபரின் நிதி சிக்கல்கள் குறித்த உண்மை நிலவரம் சரிபார்க்கப்பட்ட பின்னரே இந்த மையம் ஒரு சட்ட நிபுணரை நியமிக்கும்” என்றும் நாசர் தெரிவித்துள்ளார். இருப்பினும், மையத்தின் சேவைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இளைஞர்களை பாதுகாத்தல்…
பிறரை கொடுமைப்படுத்துதல், அவதூறு செய்தல், வன்முறையைத் தூண்டுதல் மற்றும் ஆன்லைன் அல்லது கேமிங் போதை போன்ற சமூக விரோத நடத்தைகளைத் தடுப்பதையும் இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பெற்றோர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் கூட்டங்கள் போன்றவையும் இதில் உள்ளடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் நபர்களைக் கண்காணிக்க ‘மசவுலியா’ ஒரு முக்கியமான திட்டம் என்று சட்ட நிபுணர் அலி அல் அபாடி என்பவர் கருத்து தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.