ADVERTISEMENT

பிரிட்டனில் இருந்து ஓமான் வந்த 4 நபர்களுக்கு புதிய வகை கொரோனா தொற்றா என சந்தேகம்..!! வைரஸின் மரபணு குறித்த ஆய்வில் சுகாதார அமைச்சகம்..!!

Published: 22 Dec 2020, 11:52 AM |
Updated: 22 Dec 2020, 11:57 AM |
Posted By: admin

கொரோனா வைரஸின் தாக்கம் ஒரு வருடம் ஆகியும் ஓயாத நிலையில், தற்பொழுது கொரோனா வைரஸின் புதிய வடிவம் ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவி வருவது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் 70 சதவீதம் கூடுதல் தொற்றுத்தன்மையுடன் இருப்பதால் பெரும்பாலான உலக நாடுகள் மீண்டும் பயணக் கட்டுபாடுகளை அறிவித்துள்ளன.

ADVERTISEMENT

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமான் அரசும் இந்த புதிய வகை கொரோனா வைரசிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்நிலையில், பிரிட்டனில் இருந்து ஓமான் வந்திருக்கும் நான்கு நபர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஓமானின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனிலேயே அதிகம் பரவி இருப்பதால், அங்கிருந்து வந்த தற்பொழுது வைரஸ் பாதிப்புள்ள நான்கு நபர்களுக்கும் இந்த புதிய வகை வைரஸ் தொற்று இருக்குமோ என்று சந்தேகிப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதனால் தொற்று ஏற்பட்ட நபர்களிடம் பரவியுள்ள வைரஸின் மரபணு வரைபடத்தை குறித்து சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் முடிவுகள் ஆய்விற்குப் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் அகமது அல் சைடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இருப்பினும், கொரோனா வைரஸை விட இந்த புதிய வகை வைரஸ் ஆபத்தானது என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இதன் பரவும் தன்மை மட்டுமே அதிகத்திறனுடன் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓமான் அரசானது இந்த புதிய வகை வைரசிற்கு எதிராக ஒரு வாரத்திற்கு சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்து மற்ற நாடுகளுடனான தனது எல்லைகளை மூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.