ADVERTISEMENT

வாகனங்களில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் வழங்குவதை நிறுத்த உணவகங்களுக்கு உத்தரவு..!! ஷார்ஜா முனிசிபாலிடி சுற்றறிக்கை..!!

Published: 10 Dec 2020, 12:11 PM |
Updated: 10 Dec 2020, 12:25 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உணவகங்களுக்கு சென்று உணவுகளை வாங்கும் குடியிருப்பாளர்கள் தங்களின் வாகனங்களை அந்தந்த உணவகங்களுக்கு அருகிலேயே தற்காலிகமாக பார்க்கிங் செய்து விட்டு உணவு வாங்கி செல்வது வழமையாக நடைபெறும் நிகழ்வாகும். சில சமயங்களில் இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் கூட ஏற்படும் வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஷார்ஜா முனிசிபாலிடியானது ஷார்ஜாவில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சமூகத்தின் சில உறுப்பினர்களுக்காக நியமிக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் தங்கள் கார்களை நிறுத்தி வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு அல்லது போக்குவரத்தைத் தடுக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு உணவு சேவைகள் வழங்குவதை நிறுத்துமாறு ஷார்ஜா முனிசிபாலிடி அனைத்து உணவு நிலையங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்த முடிவானது பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும், வாடிக்கையாளர்களுக்கு பார்க்கிங் இடங்களில் சேவையை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் ஏற்பாடு செய்வதையும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்ப்பதையும், ஷார்ஜாவின் அழகியல் தோற்றத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொது சுகாதாரத் துறை மற்றும் மத்திய ஆய்வகங்களுக்கான உதவி இயக்குநர் ஜெனரல் ஷேகா ஷாசா அல் முல்லா அவர்கள் இது குறித்து கூறுகையில், “குறிப்பிட்ட குடியிருப்பாளர்களுக்காக நியமிக்கப்பட்ட பார்க்கிங் இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கார்களில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதை நிறுத்துமாறு ஷார்ஜாவில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களுக்கும் முனிசிபாலிடி ஏற்கனவே ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். .

மேலும், முனிசிபாலிட்டி அறிவித்துள்ள இந்த விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும், உணவகங்கள் இந்த விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிக்கின்றனவா என்பதை உறுதி செய்வதற்கும் ஆய்வு பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதே போல் வாடிக்கையாளர் சேவைத் துறையின் உதவி பொது மேலாளர் காலித் பின் ஃபலாஹ் அல்-சுவைதி அவர்கள் கூறுகையில், ஷார்ஜாவில், பார்க்கிங்கில் குறிப்பிட்ட பிரிவினருக்காக நியமிக்கப்பட்ட இடங்களில் அல்லது கடைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பார்க்கிங் செய்தல் போன்ற பொது வாகன நிறுத்துமிடத்தை தவறாகப் பயன்படுத்துவதை கண்காணிக்க பொது பார்க்கிங் துறை அவ்வப்போது ஆய்வுகள் செய்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கப்படும் வரை சாலையின் நடுவில் நின்று போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் காத்திருக்கும் வாகன ஓட்டி மீது ஆய்வாளர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஷார்ஜா முனிசிபாலிடியானது வணிக நிறுவனங்களுக்கு பார்க்கிங் முன்பதிவு சேவையை (parking reservation service) வழங்கியுள்ளது, இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப அந்நிறுவனங்கள் ரிசெர்வ் செய்திருக்கும் இடங்களில் பார்க்கிங் செய்து கொள்வதை எளிதாக்குகிறது.

ஒரு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு பார்க்கிங் அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது, ​​ஒரு ஆய்வாளர் அந்த பகுதிக்கு சென்று அந்நிறுவனத்திற்கு வழங்கப்படும் பார்க்கிங் அனுமதியானது, எந்தவிதமான போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தாது என்பதை உறுதிசெய்வார். அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டால், பார்க்கிங் இடங்களை முன்பதிவு செய்ய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.