ஐக்கிய அரபு அமீரகத்தில் புத்தாண்டையொட்டி பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கும் நிலையில், புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அஜ்மானிலும் சிறப்பு வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜ்மான் சுற்றுலா மேம்பாட்டுத் துறையானது (Ajman Tourism Development Department, ATDD) புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31 நள்ளிரவில் இரண்டு மாபெரும் வன வேடிக்கை நிகழ்ச்சிகளை நிகழ்த்த ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த வான வேடிக்கை நிகழ்ச்சிகளானது இரண்டு இடங்களில் இருந்து நிகழ்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
1. அஜ்மான் கார்னிச்சில் அஜ்மான் சாரேக்கு எதிரே (Ajman Saray)
2. அல் ஸோராவில் உள்ள ஓபராய் பீச் ரிசார்ட்டுக்கு அடுத்ததாக (Oberoi Beach Resort at Al Zorah).
இந்த வான வேடிக்கைகள் ஐந்து நிமிடங்கள் நிகழ்த்தப்படும் என்றும், அல் ஸோராவில் நிகழ்த்தப்படும் வான வேடிக்கைகளை பொதுமக்கள் மெரினா 1 (Marina 1) இல் கண்டு களிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ATDD டைரக்டர் ஜெனரல் சலே முகமது அல் கெஜிரி அவர்கள் கூறுகையில், “அஜ்மானின் குடியிருப்பாளர்கள் மற்றும் விருந்தினர்கள் அஜ்மானின் புத்தாண்டு கொண்டாட்டங்களை எதிர்நோக்கியுள்ளனர், இது அஜ்மானின் பொருளாதார துறைகளுக்கு குறிப்பாக சுற்றுலா துறைக்கு பயனளிக்கும். பண்டிகை காலங்களில் பார்வையாளர்களுக்காக மேற்கொள்ளப்படும் பலவிதமான நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளின் காரணமாக அஜ்மான் ஹோட்டல்கள் வழக்கமாகவே அதிகளவில் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, அல் ஸோரா டெவலப்மென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இமாத் அல் டானா அவர்கள் கூறுகையில், “புத்தாண்டு தினத்தன்று இந்த வான வேடிக்கை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது அஜ்மானின் வானத்தை ஒளிரச் செய்யும். அல் சோரா டெவலப்மென்ட் கம்பெனியில் நாங்கள் தொடர்ந்து அஜ்மான் சுற்றுலாத் துறையை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு இதற்கு முன்னராக துபாய் மற்றும் ராஸ் அல் கைமாவில் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.