ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் மூலம் துபாயில் உள்ள மால்களில் தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், துபாயில் பல்வேறு இடங்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள், வான வேடிக்கை என களைகட்டிக்கொண்டு இருக்கின்றது. துபாயினை பின்தொடர்ந்து தற்பொழுது அபுதாபியும் இந்த வருடம் முதன் முதலாக அபுதாபி ஷாப்பிங் சீசன் எனும் நிகழ்வை கடந்த டிசம்பர் 10 ம் தேதி முதல் தொடங்கி தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் மற்றும் அபுதாபியினை பின்தொடர்ந்து ஷார்ஜாவும் ஷாப்பிங்கிற்காக புதியதொரு ப்ரோமோஷனை ஆரம்பித்துள்ளது. ‘Back to shopping’ என்ற வாசகத்தினைக் கொண்ட இந்த ப்ரோமோஷன் அடுத்த வருடம் பிப்ரவரி 13 வரையிலும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
59 நாள் நடைபெறவிருக்க கூடிய இந்நிகழ்வில் ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் சந்தைகளில் உள்ள கடைகளில் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படும் என்று ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (Sharjah Chamber of Commerce and Industry) தெரிவித்துள்ளது. இதில் பொருட்களுக்கு 75 சதவீதம் வரையிலும் தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலி நபர்கள் 12 கார்கள் உட்பட 3 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள பரிசுகளை வெல்வார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷார்ஜாவில் கொரோனாவிற்கெதிரான பாதுகாப்பு நெறிமுறைகள் கடுமையாக செயல்படுத்தப்படும் என்பதால் குடியிருப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பாதுகாப்பான ஷாப்பிங் அனுபவம் இதில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.