உலகின் மிக உயரமான கட்டிடமான துபாய் புர்ஜ் கலீஃபாவில், புத்தாண்டை முன்னிட்டு பிரம்மாண்டமான வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது இதற்கு முன் பார்த்திராத அளவில் புதிய நிகழ்ச்சிகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லேசர், லைட்ஸ், மியூசிக் என களை கட்டவிருக்கும் இந்த புதிய நிகழ்சிகளானது வரும் மார்ச் மாதம் 31ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிகழ்ச்சி அமைப்பாளர்கள், புர்ஜ் கலீஃபா லைட்ஸ் மற்றும் லேசர் நிகழ்ச்சிகள் என புத்தாண்டு கொண்டாட்டத்தை போன்றே அதே பிரம்மாண்டத்தையும் அழகையும் கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சிகள் கனவுகள் (Dreams), வடிவியல் (geometrics), கெலிடோஸ்கோப் (kaleidoscope), ரெட்ரோ-ஃபியூச்சரிஸ்டிக் (retro-futuristic) மற்றும் சீன புத்தாண்டு போன்ற கருப்பொருள்களை பிரதிபலிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடைபெறும் நாட்கள்
புர்ஜ் கலீஃபாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய நிகழ்ச்சிகள் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 7.45 மற்றும் இரவு 9.45 மணிக்கு நடைபெறும்.
அத்துடன் சீன புத்தாண்டை முன்னிட்டு LED, லைட்ஸ் மற்றும் லேசர் ஷோ பிப்ரவரி 12 முதல் 20 வரை நடைபெறும்.