துபாயில் இன்று (புதன்கிழமை) காலை தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து லாரி மீது மோதியதில் 27 தொழிலாளர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது ஜபேல் அலி தொழில் துறை பகுதியில் அமைந்துள்ள துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் (DIP) பகுதியில் உள்ள டெக்னோ பார்க்கில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பேருந்தில் பயணித்த தொழிலாளர்கள் அனைவரும் வாசனை திரவிய தொழிற்சாலையில் (perfume factory) பணிபுரிபவர்கள் என்றும், பேருந்தில் பயணம் செய்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்றும் கூறப்படுகிறது. நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜபேல் அலியில் உள்ள தொழிலாளர்களின் தங்குமிடத்தில் இருந்து அவர்களை ஏற்றிக்கொண்டு தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே துபாய் கார்ப்பரேஷன் ஃபார் ஆம்புலன்ஸ் சர்வீசஸ் பஸ் ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த அனைத்து தொழிலாளர்களும் DIP அருகிலுள்ள NMC ராயல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து NMC ஹெல்த்கேர் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “இந்த விபத்தில் எவ்விதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை மற்றும் அனுமதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் ” என்று தெரிவித்துள்ளார்.
விபத்து ஏற்பட்ட இரண்டு வாகனங்களுக்கிடையில் பாதுகாப்பான தூரம் இல்லாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொது போக்குவரத்துத் துறை இயக்குநர் பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நான்கு தொழிலாளர்களுக்கு மிதமான காயங்களும், 23 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இதுபோன்ற விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக அனைத்து வாகன ஓட்டிகளையும் எச்சரிக்கையுடன் ஓட்டவும், போக்குவரத்துச் சட்டங்கள் மற்றும் சாலைகளில் வேக வரம்புகளைக் கடைப்பிடிக்கவும் வாகன ஓட்டிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
NMC ராயல் மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷ் கிருஷ்ணா ராம் அவர்கள் கூறுகையில், “அனைத்து நோயாளிகளும் நிலையாக உள்ளனர். சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன, இரண்டு பேருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். எலும்பு மற்றும் ஆழமான திசு காயங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த மேலும் கதிரியக்க சோதனை (radiological investigations) மேற்கொள்ளப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.