ADVERTISEMENT

துபாயில் பேருந்து, டாக்ஸிகளுக்கென பிரத்யேக பாதை..!! போக்குவரத்து நெருக்கடியை குறைக்க அரசின் ஸ்மார்ட் திட்டம்..!!

Published: 10 Jan 2021, 1:51 PM |
Updated: 10 Jan 2021, 2:37 PM |
Posted By: admin

துபாயில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக பேருந்துகள் மற்றும் டாக்சிகள் செல்வதற்கென பிரத்யேகமான தனி பாதையொன்று தற்பொழுது வடிவமைக்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பிரத்யேக பாதைகள் துபாயின் போக்குவரத்து பயண நேரங்களைக் குறைக்க உதவுகின்றன.

ADVERTISEMENT

சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), காலித் பின் அல் வலீத் தெருவில் (Khalid bin Al Waleed Street) பேருந்துகள் மற்றும் டாக்ஸிகளுக்கான பிரத்யேக பாதைத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பாதையானது காலித் பின் அல் வலீத் ஸ்ட்ரீட்-அல் மினா ஸ்ட்ரீட் சந்திப்பிலிருந்து (Khalid bin Al Waleed Street-Al Mina Street Intersection) ஜபீல் ஸ்ட்ரீட் சந்திப்புக்கு (Zabeel Street Intersection) சற்று முன், இரு திசைகளிலும் என இந்த பாதை 4.3 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பேருந்துகள் மற்றும் டாக்ஸிகளுக்கான இந்த பிரத்யேக பாதை வரும் ஜனவரி 21 வியாழக்கிழமை முதல் செயல்படும் என்றும் அதுவரையிலும், பேருந்து ஓட்டுநர்கள் சோதனை அடிப்படையில் இந்த பாதைகளைப் பயன்படுத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாதையானது ஒரு தனித்துவமான சிவப்பு நிறத்தால் குறிக்கப்பட்டிருக்கும்.

ADVERTISEMENT

மூன்றாம் கட்டத்தை நிறைவு செய்வதன் மூலம், அல் மன்கூல் (Al Mankhool), அல் கலீஜ் (Al Khaleej), காலித் பின் அல் வலீத் (Khalid bin Al Waleed), அல் குபைபா (Al Ghubaiba), நைஃப் (Naif), அல் இத்திஹாட் (Al Ittihad) மற்றும் அல் மினா (Al Mina) ஆகிய ஏழு முக்கிய வீதிகளில் பஸ் மற்றும் டாக்ஸிகளுக்கான பிரத்யேக பாதைகளின் மொத்த நீளம் 11.6 கி.மீ. வரை நீள்கிறது. தற்போது, ​​40 பேருந்து வழித்தடங்கள் பிரத்யேக பாதைகளைப் பயன்படுத்தும் என்றும், அவற்றில் 19 பேருந்து வழித்தடங்கள் காலித் பின் அல் வலீத் தெருவைப் பயன்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகள் மற்றும் போக்குவரத்து அதிகாரசபையின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவரான மட்டார் முகமது அல் தாயர் கூறுகையில், “இத்திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களின் மிகப்பெரிய வெற்றிகளை தொடர்ந்து தற்பொழுது மூன்றாம் கட்டமும் நிறைவுற்றுள்ளது. இந்த பிரத்யேக பாதைகளின் மூலம் சுமார் ஐந்து நிமிடங்கள் ஒவ்வொரு பேருந்தின் பயணத்திலும் சேமிக்கப்படுகிறது. இது பேருந்துகளின் பயண நேரங்களை 24% மேம்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், “பிரத்யேக பஸ் மற்றும் டாக்ஸி பாதைகளை உருவாக்குவது ஒரு வெற்றிகரமான உலகளாவிய நடைமுறையாகும், இது தனியார் வாகனங்களை விட பொது போக்குவரத்து வழிகளில் பயணம் செய்ய பொதுமக்களை ஊக்குவிக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

“இது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல பெருநகரங்களில் ஒரு பொதுவான நடைமுறையாகும். சரியான நேரத்தில் புறப்படுவதற்கான இணக்கத்தின் சதவீதத்தை அதிகரிப்பதும், பொது போக்குவரத்தைப் பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிப்பதும், டாக்ஸி வருகை நேரத்தை மேம்படுத்துவதும், நேரடி மற்றும் மறைமுக செயல்பாட்டு செலவுகள் மற்றும் மாசுபடுத்தும் உமிழ்வைக் குறைப்பதும் இதன் நோக்கமாகும்” என்றும் அவர் விளக்கியுள்ளார்.

முன்னதாக, RTA 7.3 கி.மீ நீளமுள்ள பிரத்யேக பேருந்து பாதைகளின் கட்டுமானத்தை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

அதில் உள்ளடங்கும் பகுதிகள்:

  • நைஃப் ஸ்ட்ரீட் (1 கி.மீ)
  • அல் இத்திஹாத் ரோட் (500 மீ)
  • அல் மினா ஸ்ட்ரீட் (குவைத் ஸ்ட்ரீட்டில் இருந்து ஃபால்கான் சந்திப்பு (Falcon intersection) வரை 1.7 கி.மீ)
  • அல் மன்கூல் ஸ்ட்ரீட் (அல் சத்வா ரவுண்டபௌட்டில் (roundabout) இருந்து ஷேக் ரஷீத் ஸ்ட்ரீட் வரை 1.8 கி.மீ)
  • அல் கலீஜ் ஸ்ட்ரீட் (க்ரீக் ஸ்ட்ரீட்டில் இருந்து அல் முசல்லா ஸ்ட்ரீட் வரை 1.7 கி.மீ)
  • காலித் பின் அல் வலீத் ஸ்ட்ரீட் (அல் மினா ஸ்ட்ரீட் சந்திப்பிலிருந்து தெரு 16 வரை 100 மீ)
  • அல் குபைபா ஸ்ட்ரீட் (அல் மினா ஸ்ட்ரீட் சந்திப்பிலிருந்து ஸ்ட்ரீட் 12 வரை 500 மீ)