வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தினால் அவர்களுக்கு அபராதத்தில் தள்ளுபடி வழங்கப்படும் என அபுதாபி காவல்துறை தற்பொழுது தெரிவித்துள்ளது. அபுதாபியில் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதங்களை, அபராதம் விதிக்கப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள் செலுத்தினால் அவர்களுக்கு அபராதத்தில் 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் தங்களது அபராதங்களை விரைவிலேயே செலுத்தி அபராதத்திற்கான தள்ளுபடி பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 60 நாட்களுக்கு பின் அபராதம் செலுத்தும் நபர்களுக்கும் அபராதத்தில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடுமையான குற்றம் புரிந்தோரை தவிர மற்ற அனைத்து போக்குவரத்து விதிமீறல் புரிந்தோருக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து மீறல்களைத் தவிர்ப்பதற்காக வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுமாறும் காவல்துறை வாகன ஓட்டிகளை வலியறுத்தியுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், அபுதாபி காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகம், வட்டி இல்லாத தவணைகளைப் பயன்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் செலுத்த ஏதுவாக ஐந்து வங்கிகளுடனான ஒப்பந்தத்தை புதுப்பித்ததாக அறிவித்தது. அபுதாபி கமர்ஷியல் பேங்க் (ADCB), அபுதாபி இஸ்லாமிக் வங்கி (ADIB), ஃபர்ஸ்ட் அபுதாபி பேங்க் (FAB), மஷ்ரேக் அல் இஸ்லாமி மற்றும் எமிரேட்ஸ் இஸ்லாமிக் பேங்க் ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள வங்கிகள் ஆகும்.
வாகன ஓட்டிகள் தங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் போக்குவரத்து அபராதங்களை www.adpolice.gov.ae மூலமாகவோ அல்லது AD Police மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவோ செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.