சவூதி அரேபிய அரசானது கொரோனாவிற்கான தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸுக்கு வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது சிறந்த பாதுகாப்பை அளிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பல மருத்துவ ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளை மதிப்பாய்வு செய்து, பல்வேறு பிராண்டுகளிலிருந்து தடுப்பூசிக்கான டோஸ்களை வழங்குவதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை சோதித்ததன் அடிப்படையில், சவூதி அரேபியாவின் பொது சுகாதார ஆணையம் (weqaya) தடுப்பூசியின் முதல் அல்லது இரண்டாவது டோஸிற்கு வெவ்வேறு தடுப்பூசிகளை உபயோகித்தல் மற்றும் பொருந்தக்கூடிய அணுகுமுறையை அங்கீகரித்தது.
“சர்வதேச விஞ்ஞான ஆய்வுகளின்படி இந்த ஒப்புதல் இரண்டு வெவ்வேறு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பாதுகாப்பாகவும் திறமையாகவும் வைரஸை எதிர்த்துப் போடுவதற்கான வாய்ப்பைக் காட்டியுள்ளது” என்று அமைச்சகம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு அறிக்கையில், 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முதல் டோஸைப் பெற்று 42 நாட்கள் கழித்தவர்களுக்கு, வியாழக்கிழமை தொடங்கி இரண்டாவது டோஸ் எடுக்கலாம் என்று அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சவூதியில் இதுவரை 16.9 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் நாடு முழுவதும் உள்ள 587 மையங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.