ஓமானில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஓமான் அரசால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் அடுத்த அளவுகோலாக, அரசாங்க அலுவலகங்கள், பொது சேவை வளாகங்கள் மற்றும் பள்ளிகளில் நுழைவதற்கு கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான சான்று கட்டாயமாக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடைசியாக நடைபெற்ற சுப்ரீம் கமிட்டி கூட்டத்தில் பேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் அகமது பின் முகமது அல் சயீதி, “தடுப்பூசி போட்டுக்கொண்டதை காட்டும் ஆவணம் எதிர்காலத்தில் ஓமானில் உள்ள எந்தவொரு பொது அலுவலகம் அல்லது அரசு பிரிவுகள் மற்றும் பள்ளிகளில் நுழைய ஒரு அளவுகோலாக மாற்றப்படும்” என்று கூறியுள்ளார். இந்த செயல்முறை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரங்கள் இல்லாத மக்கள் குறிப்பிட்ட இடங்களுக்குள் நுழைய தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2020 டிசம்பரில் முதற்கட்டமாக 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்கள் போன்ற குறிப்பிட்ட மக்களுக்கு தடுப்பூசி போட தொடங்கியதிலிருந்து தற்பொழுது வரையிலும் 1 மில்லியனுக்கும் அதிகமான அளவில் ஓமான் அரசால் தடுப்பூசி நிர்வகிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிவாய்ந்த மக்கள் தொகையில் 23 சதவீதம் எனவும் கூறியுள்ளது.
மேலும் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் 3.2 மில்லியன் கோவிட் -19 தடுப்பூசிகளைப் ஓமான் அரசு பெறவிருப்பதாகவும், இதுவரையிலும் 1,515,130 டோஸ் தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்ப்பிணி பெண்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஓமான் அரசு ஒப்புதலை வழங்கியிருந்தது.
அதன்படி, அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் கருவுற்று 14 வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தை முடித்த பின்னர் தடுப்பூசியை பெறலாம் என்றும், மேலும் அவர்கள் கிரீன் அட்டையை கொண்டு வர வேண்டும் எனவும் இது ஓமானிய குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் பொருந்தும் என்றும் சுகாதார அமைச்சகத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.