இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை நீடித்து வந்த நிலையில் தற்பொழுது அந்த தடை நீக்கப்படுவதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் சேவைகளை, இந்தியாவில் இருந்தும் இந்தியாவிற்கும் மீண்டும் தொடங்குவது தொடர்பான விவகாரம், உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து டிசம்பர் 15 முதல் மீண்டும் தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சிங்கப்பூர், சீனா, பிரிட்டன் உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து சர்வதேச விமான சேவைகளுக்கான தடை நீடிக்கும் என்றும் இந்த நாடுகளுடன் ஏர் பபுள் ஒப்பந்தம் மூலம் இயக்கப்படும் விமான சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பினால் இந்தியாவில் கடந்த மார்ச் 2020 முதல் சர்வதேச விமானப்போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தடை விதிக்கப்பட்ட பின்னர் இந்தியா குறிப்பிட்ட நாடுகளுடன் ஏர பபுள் ஒப்பந்தம் மூலம் சிறப்பு விமான சேவைகளை தற்பொழுது வரை இயக்கி வருகிறது. இதன் மூலம் ஒரு வாரத்திற்கு என குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
தற்பொழுது அரசின் இந்த அறிவிப்பால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.