கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு கொண்ட ஒமிக்ரான் வைரஸ் கடந்த சில வாரங்களாகவே உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலை தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும் மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக சில நாடுகள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து பயணிகள் தங்கள் நாட்டில் நுழைவதற்கு பயண தடை விதித்து வருகிறது.
கொரோனாவின் இரண்டாம் அலையின் காரணமாக இந்தியாவிற்கும் மற்றும் சில நாடுகளுக்கும் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக அமலில் இருந்து வந்த விமான பயண கட்டுப்பாடுகள் சில மாதங்களுக்கு முன்புதான் நீக்கப்பட்டு பயணிகள் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவல் மற்றும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்வு ஆகியவற்றினால் இந்தியா மற்றும் பிற ஏழு நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு ஹாங்காங் அரசு பயண தடையை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசால் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த பயண தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஹாங்காங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விமான பயண தடையானது இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய எட்டு நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் அரசு அறிவித்திருக்கும் இந்த பயணிகள் விமானத்திற்கான தடை வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 8 ம் தேதி முதல் ஜனவரி 21 ம் தேதி வரை என இரண்டு வாரங்களுக்கு தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது தவிர ஹாங்காங்கிலிருந்து சுற்றுலா சென்று வந்த ராயல் கரீபியனின் ‘ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ்’ கப்பலில் பயணித்த 2,500 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்வதற்காக அவர்கள் இன்று புதன்கிழமை கப்பலில் தடுத்து நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சில நாட்களாகவே உலக நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த திங்கள்கிழமை மட்டும் அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதுவே உலகளவில் ஒரே நாளில் பதிவாகிய அதிகபட்ச கொரோனா பாதிப்புகள் ஆகும்.