ADVERTISEMENT

UAE: வேலை ஒப்பந்தத்தில் இனி இதெல்லாம் கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..

Published: 7 Feb 2022, 7:36 AM |
Updated: 10 Aug 2022, 8:37 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிகாரம் அளிக்கும் திருத்தங்கள் மற்றும் வேலைவாய்ப்பு சீர்திருத்தங்களை உள்ளடக்கிய புதிய தொழிலாளர் சட்டம் அமீரக அரசால் அறிவிக்கப்பட்டு இம்மாதம் (பிப்ரவரி 2) முதல் அமலுக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

புதிய தொழிலாளர் சட்டத்தின் படி, தனியார் நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுடன் போட்டுக்கொண்ட வரம்பற்ற ஒப்பந்தங்களை (unlimited contract) ஒரு வருடத்திற்குள் மூன்று வருட நிலையான கால ஒப்பந்தங்களுடன் (limited contract) மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள வரம்பற்ற ஒப்பந்தங்களை மாற்றுவதற்காக நிறுவன முதலாளிகளுக்கு பிப்ரவரி 3, 2023 வரை காலக்கெடுவும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இனிமேல் புதிதாக போடப்படும் வேலை ஒப்பந்தங்களும் நிலையான ஒப்பந்தங்களாக மட்டுமே இருக்கும். இது தவிர புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் பகிரப்பட்ட வேலைகள் (shared), பகுதிநேர வேலைகள் (part time), முழுநேர வேலைகள் (full time), தற்காலிக வேலைகள் (temporary), நெகிழ்வான வேலைகள் (flexible) மற்றும் தொலைதூர வேலைகள் (remote work) என ஆறு விதமான வகைகளின் கீழ் ஊழியர்கள் மற்றும் முதலாளிகளின் பொறுப்புகள் மற்றும் உரிமைகளை நிர்வகிக்க ஒப்பந்தங்கள் வழங்கப்படும்.

ADVERTISEMENT

புதிதாக பணியில் அமர்த்தப்படும் தொழிலாளர்கள் மற்றும் நிறுவன முதலாளிகள் இடையே இவ்வாறு போடப்படும் ஒப்பந்தங்களில் என்னென்ன தகவல்கள் கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பது பற்றி ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அது பற்றிய கூடுதல் தகவல்களை நாம் இங்கே காணலாம்.

  • பணியமர்த்தப்படும் தொழிலாளரின் வேலை அல்லது தொழில்
  • வேலையில் சேரும் தேதி
  • வேலை செய்ய போகும் இடம்
  • வேலை செய்ய ஒப்புக்கொள்ளும் நேரம்
  • வார இறுதி நாட்களில் வழங்கப்படும் ஓய்வு நாட்கள்
  • புதிதாக போடப்படும் ஒப்பந்தத்தின் காலம்
  • தொழிலாளர்களின் ஊதியம் (பயன்கள் மற்றும் அலவன்ஸ் உட்பட)
  • தொழிலாளர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்படும் வருடாந்திர விடுப்பு
  • வேலையை விடுவதற்கு முன்பாக தெரியப்படுத்த வேண்டிய அறிவிப்பு காலம் (notice period)
  • வேலை ஒப்பந்தத்தை முடிப்பதற்கான நடைமுறைகள்

புதிய தொழிலாளர் சட்டத்தின் படி, மேலே கூறப்பட்டுள்ள இந்த தகவல்கள் அனைத்தையும் புதிதாக போடப்படும் வேலை ஒப்பந்தங்களில் குறிப்பிடுவதுடன், வேலை வழங்கும் முதலாளியின் பெயர் மற்றும் முகவரி, தொழிலாளியின் பெயர், பிறந்த இடம், பிறந்த தேதி மற்றும் தகுதிகள் ஆகியவையும் வேலை ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட வேண்டும். இது தவிர மனிதவள அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட மற்ற தரவுகளும் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

புதிதாக போடப்படும் வேலை ஒப்பந்தத்தில் முதலாளிகள் மற்றும் தொழிலாளிகள் போட்டுக்கொண்ட உடன்படிக்கையைப் பொறுத்து ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் அல்லது அதற்கும் குறைவாக வேலை ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படும். இந்த ஒப்பந்த நீட்டிப்பு காலம் தொழிலாளியின் இறுதிக் கால சேவை ஊதியத்திலும் (end of service gratuity) சேர்க்கப்படும்.

இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்பந்தங்கள் ஒரு பணி மாதிரியிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றப்படலாம். அவ்வாறு தொழிலாளர்களுக்கான வேலை மாதிரியை மாற்றுவதற்கு முன், முதல் ஒப்பந்தத்தின் உரிமைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படுவதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் இந்த புதிய சட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் அங்கீகரிக்கப்பட்ட வேலை ஒப்பந்த படிவங்களுக்கு புதிய உட்பிரிவுகளை அறிமுகப்படுத்தவும் அமைச்சகம் அனுமதியும் வழங்கியுள்ளது.