ADVERTISEMENT

UAE: புரோபேஷன் காலத்தில் ஒரு ஊழியர் வேலையை மாற்றி கொள்ள முடியுமா..? சட்டம் சொல்வது என்ன..?

Published: 2 Mar 2022, 8:23 AM |
Updated: 13 Mar 2022, 8:39 PM |
Posted By: admin

அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் புதிதாக வேலையில் சேர்ந்த ஒரு ஊழியர் தனது ஆறு மாத புரோபேசன் காலத்தின் (probation period) போது வேலையை விட்டு வெளியேற விரும்பினால் அதற்கு அனுமதி உண்டா..? அவ்வாறு வெளியேறும் பட்சத்தில் அவரின் முதலாளிக்கு ஏதேனும் இழப்பீடு கொடுக்க வேண்டுமா..? அமீரகத்தின் புதிய தொழிலாளர் சட்டம் இது குறித்து கூறுவது என்ன..? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE) புரோபேசன் காலத்தின் போது ஒரு ஊழியர் வேலையை விட்டு வெளியேறுவதற்கு புதிய தொழிலாளர் சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்த விழிப்புணர்வை தனது சமூக ஊடக சேனல்கள் மூலம் தொழிலாளர்களுக்கு பகிர்ந்துள்ளது.

அதில், அமீரகம் முழுவதும் பிப்ரவரி 2, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ள தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை சட்டம் எண். 33 ஆனது, புரோபேசன் காலத்தில் வேலையை விடுவது தொடர்பாக தொழிலாளிகள் மற்றும் முதலாளிகள் தொடர்பான உரிமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி சட்டத்தின் 9 வது பிரிவு என்ன கூறுகிறது என்பது பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
கட்டுரை (9) – புரோபேசன் காலம் (probation period)

1. பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு மிகாமல் புரோபேசன் காலத்தின் கீழ் ஒரு ஊழியரை பணியமர்த்த முதலாளிக்கு உரிமை உண்டு, மேலும் பணிநீக்கம் செய்யக்கூடிய தேதிக்கு முன் எழுத்துப்பூர்வமாக 14 நாள் அறிவிப்பை (notice period) வழங்கிய பின்னர், ஊழியரின் சேவையை புரோபேசன் காலத்தின் போது முதலாளி நிறுத்தலாம்.

2. ஒரு தொழிலாளி ஒரு முதலாளியுடன் புரோபேசன் காலத்தின் கீழ் ஒரு முறைக்கு மேல் நியமிக்கப்பட மாட்டார், மேலும் அந்தத் தொழிலாளி புரோபேசன் காலத்தை வெற்றிகரமாகக் கடந்து தொடர்ந்து பணிபுரிந்தால், ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி வேலை ஒப்பந்தம் செல்லுபடியாகும். மேலும் இந்த ஆறு மாத காலமும் ஊழியரின் சேவை இறுதி ஊதியத்தில் கணக்கிடப்பட வேண்டும்.

ADVERTISEMENT

3. புரோபேசன் காலத்தின் போது ஒரு ஊழியர் தனது வேலையை மாற்றி வேறொரு முதலாளியிடம் வேலை செய்ய விரும்பினால், அந்த ஊழியர் தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு வேறொரு முதலாளியிடம் வேலை செய்ய விரும்புவதை தெரிவிக்கும் விதமாக, முதல் முதலாளிக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பை ஒரு மாதத்திற்கு முன்பாக கொடுக்க வேண்டும். மேலும் புதிய முதலாளி அந்த ஊழியரின் முதல் முதலாளிக்கு பணியமர்த்தல் அல்லது பணியாளருடன் ஒப்பந்தம் செய்வதற்கான செலவுகளை இழப்பீடாக வழங்க வேண்டும். ஒரு வேளை முதல் முதலாளியுடனான ஒப்பந்தத்தில் இழப்பீடு தொடர்பாக ஏதேனும் குறிப்பிடப்பட்டிருந்தால் அது பின்பற்றப்படும்.

4. ஊழியர் ஒருவர் புரோபேசன் காலத்தின் போது நாட்டை விட்டு வெளியேற விரும்பி தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள விரும்பினால், ஒப்பந்தம் முடிவடைவதற்கு குறிப்பிடப்பட்ட தேதிக்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னதாக எழுத்துப்பூர்வமாக தனது முதலாளிக்கு அறிவிக்க வேண்டும். ஒருவேளை அவர் அமீரகத்திலிருந்து புறப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் புதிய வேலை கிடைத்து அமீரகம் திரும்பினால், அவரின் புதிய முதலாளி மேலே கூறப்பட்டபடி இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.

5. முதலாளி அலலது தொழிலாளி இந்த கட்டுரையின் விதிகளை மதிக்காமல் பணி ஒப்பந்தத்தை நிறுத்தினால், மீறலில் ஈடுபட்டவர் இரண்டாவது தரப்பினருக்கு அறிவிப்பு காலம் (notice period) அல்லது அறிவிப்பு காலத்தின் மீதமுள்ள காலத்திற்கான தொழிலாளியின் ஊதியத்திற்கு சமமான இழப்பீட்டை செலுத்த வேண்டும்.

6. இக்கட்டுரையின் விதிகளை கடைபிடிக்காமல் தொழிலாளி நாட்டை விட்டு வெளியேறினால், நாட்டை விட்டு வெளியேறிய நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு அமீரகத்தில் மீண்டும் வேலை செய்ய அவருக்கு பணி அனுமதி வழங்கப்படாது.

7. நிர்வாக ஒழுங்குமுறைகள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க, இந்த கட்டுரையின் 4 மற்றும் 6 வது பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பணி அனுமதி வழங்கப்படாத நிபந்தனையிலிருந்து சில வேலை வகைகள், திறன் நிலைகள் அல்லது குறிப்பிட்ட தொழிலாளர்களுக்கு அமைச்சகம் விலக்கு அளிக்கலாம்.